Psalms 84 (IRVT)
undefined கீத்தித் என்னும் வாத்தியத்தில் இசைக்கும் இராகத் தலைவனுக்குக் கோராகின் குடும்பம் அளித்த ஒரு துதிப் பாடல். 1 சேனைகளின் யெகோவாவே,உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்! 2 என்னுடைய ஆத்துமா யெகோவாவுடைய ஆலயமுற்றங்களின்மேல் வாஞ்சையும் ஆவலுமாக இருக்கிறது;என்னுடைய இருதயமும் என்னுடைய சரீரமும் உயிருள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது. 3 என்னுடைய ராஜாவும் என் தேவனுமாகிய சேனைகளின் யெகோவாவே,உம்முடைய பீடங்களின் அருகில் அடைக்கலான் குருவிக்கு வீடும்,தகைவிலான் குருவிக்குத் தன்னுடைய குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே. 4 உம்முடைய வீட்டில் தங்கி இருக்கிறவர்கள் பாக்கியவான்கள்;அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டிருப்பார்கள் (சேலா) 5 உம்மிலே பெலன்கொள்ளுகிற மனிதனும்,தங்களுடைய இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள். 6 அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள்;மழையும் குளங்களை நிரப்பும். 7 அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து,சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள். 8 சேனைகளின் தேவனாகிய யெகோவாவே,என்னுடைய விண்ணப்பத்தைக் கேளும்;யாக்கோபின் தேவனே, செவிகொடும். (சேலா) 9 எங்கள் கேடகமாகிய தேவனே, கண்ணோக்கமாக இரும்;நீர் அபிஷேகம் செய்தவரின் முகத்தைப் பாரும். 10 ஆயிரம் நாளைவிட உமது முற்றங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது;துன்மார்க்கர்களின் கூடாரங்களில் தங்கியிருப்பதைவிடஎன் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன். 11 தேவனாகிய யெகோவா சூரியனும் கேடகமுமானவர்;யெகோவா கிருபையையும் மகிமையையும் அருளுவார்;உத்தமமாக நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காமல் இருக்கமாட்டார். 12 சேனைகளின் யெகோவாவே,உம்மை நம்பியிருக்கிற மனிதன் பாக்கியவான்.