Job 26 (IRVT)
1 யோபு மறுமொழியாக: 2 “பெலனில்லாதவனுக்கு நீ எப்படி உதவிசெய்தாய்?பெலனற்ற கையை நீ எப்படி ஆதரித்தாய்? 3 நீ ஞானமில்லாதவனுக்கு எப்படி உறுதுணையாயிருந்து,மெய்ப்பொருளைக் குறித்து அறிவித்தாய்? 4 யாருக்கு அறிவைப் போதித்தாய்?உன்னிடத்திலிருந்து புறப்பட்ட ஆவி யாருடையது? 5 தண்ணீரின் கீழ் இறந்தவர்களுக்கும்,அவர்களுடன் தங்குகிறவர்களுக்கும் தத்தளிப்பு உண்டு. 6 அவருக்கு முன்பாகப் பாதாளம் தெரியும்விதத்தில் திறந்திருக்கிறது;நரகம் மூடப்படாதிருக்கிறது. 7 அவர் வடக்குமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து,பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார். 8 அவர் தண்ணீர்களைத் தம்முடைய கார்மேகங்களில் கட்டிவைக்கிறார்;அதின் பாரத்தினால் மேகம் கிழிகிறதில்லை. 9 அவர் தமது சிங்காசனம் நிற்கும் ஆகாயத்தை பலப்படுத்தி,அதின்மேல் தமது மேகத்தை விரிக்கிறார். 10 அவர் தண்ணீர்கள்மேல் சுழற்சி வட்டம் அமைத்தார்;வெளிச்சமும் இருளும் முடியும்வரை அப்படியே இருக்கும். 11 அவருடைய கண்டிப்பினால் வானத்தின் தூண்கள் அதிர்ந்து தத்தளிக்கும். 12 அவர் தமது வல்லமையினால் சமுத்திரக் கொந்தளிப்பை அமரச்செய்து,தமது ஞானத்தினால் அதின் மூர்க்கத்தை அடக்குகிறார். 13 தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்;அவருடைய கை நெளிவான சர்ப்ப நட்சத்திரத்தை உண்டாக்கியது. 14 இதோ, இவைகள் அவருடைய படைப்பில் கடைசியானவைகள்,அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்;அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை அறிந்தவன் யார்” என்றான்.