Exodus 14 (IRVT)
1 யெகோவா மோசேயை நோக்கி: 2 “நீங்கள் திரும்பி மிக்தோலுக்கும் கடலுக்கும் நடுவே பாகால்செபோனுக்கு முன்பாக இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்பாக முகாமிடவேண்டும் என்று இஸ்ரவேலர்களுக்குச் சொல்லு; அதற்கு எதிராக கடற்கரையில் முகாமிடுங்கள். 3 அப்பொழுது பார்வோன் இஸ்ரவேலர்களைக்குறித்து: அவர்கள் தேசத்திலே திகைத்துத் திரிகிறார்கள்; வனாந்திரம் அவர்களை அடைத்துப்போட்டது என்று சொல்லுவான். 4 ஆகையால், பார்வோன் அவர்களைப் பின்தொடரும்படி, நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்தி, நானே யெகோவா என்பதை எகிப்தியர்கள் அறியும்படி, பார்வோனாலும் அவனுடைய எல்லா ராணுவத்தாலும் மகிமைப்படுவேன்” என்றார்; அவர்கள் அப்படியே செய்தார்கள். 5 மக்கள் ஓடிப்போய்விட்டார்கள் என்று எகிப்தின் ராஜாவிற்கு அறிவிக்கப்பட்டபோது, மக்களுக்கு விரோதமாகப் பார்வோனும் அவனுடைய ஊழியக்காரர்களும் மனம் மாறி: “நமக்கு வேலை செய்யாதபடி நாம் இஸ்ரவேலர்களைப் போகவிட்டது என்ன காரியம்” என்றார்கள். 6 அவன் தன்னுடைய இரதத்தைப் பூட்டி, தன்னுடைய மக்களைக் கூட்டிக்கொண்டு, 7 முதல்தரமான அறுநூறு இரதங்களையும், எகிப்திலுள்ள மற்ற எல்லா இரதங்களையும், அவைகள் எல்லாவற்றிற்கும் அதிபதிகளான வீரர்களையும் கூட்டிக்கொண்டு போனான். 8 யெகோவா எகிப்தின் ராஜாவாகிய பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேலர்களைப் பின்தொடர்ந்தான், இஸ்ரவேலர்கள் பலத்த கையுடன் புறப்பட்டுப் போனார்கள். 9 எகிப்தியர்கள் பார்வோனுடைய எல்லாக் குதிரைகளுடனும், இரதங்களோடும் அவனுடைய குதிரைவீரர்களோடும் சேனைகளோடும் அவர்களைத் தொடர்ந்துபோய், கடலின் அருகிலே பாகால்செபோனுக்கு எதிரே இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்பாக முகாமிட்டிருக்கிற அவர்களை நெருங்கினார்கள். 10 பார்வோன் அருகில் வருகிறபோது, இஸ்ரவேலர்கள் தங்களுடைய கண்களை ஏறெடுத்துப்பார்த்து, எகிப்தியர்கள் தங்களுக்குப் பின்னே வருகிறதைக் கண்டு, மிகவும் பயந்தார்கள்; அப்பொழுது இஸ்ரவேலர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள். 11 அன்றியும் அவர்கள் மோசேயை நோக்கி: “எகிப்திலே கல்லறைகள் இல்லையென்றா வனாந்திரத்திலே சாகும்படி எங்களைக் கொண்டுவந்தீர்? நீர் எங்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்ததால், எங்களுக்கு இப்படிச் செய்தது ஏன்? 12 நாங்கள் எகிப்திலே இருக்கும்போது, எகிப்தியர்களுக்கு வேலை செய்ய எங்களைச் சும்மா விட்டுவிடும் என்று சொன்னோம் அல்லவா? நாங்கள் வனாந்திரத்திலே சாவதைவிட எகிப்தியர்களுக்கு வேலைசெய்கிறது எங்களுக்கு நலமாக இருக்குமே” என்றார்கள். 13 அப்பொழுது மோசே மக்களை நோக்கி: “பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் யெகோவா உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியர்களை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள். 14 யெகோவா உங்களுக்காக யுத்தம்செய்வார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்” என்றான். 15 அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ என்னிடம் முறையிடுகிறது என்ன? புறப்பட்டுப் போங்கள் என்று இஸ்ரவேலர்களுக்குச் சொல்லு. 16 நீ உன்னுடைய கோலை ஓங்கி, உன்னுடைய கையைக் கடலின்மேல் நீட்டி, கடலைப் பிளந்துவிடு; அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் கடலின் நடுவாக வறண்ட நிலத்தில் நடந்துபோவார்கள். 17 எகிப்தியர்கள் உங்களைப் பின்தொடர்ந்து வரும்படி நான் அவர்களின் இருதயத்தைக் கடினப்படுத்தி பார்வோனாலும் அவன் இரதங்கள் குதிரைவீரர்கள் முதலாகிய அவனுடைய எல்லா இராணுவத்தாலும் மகிமைப்படுவேன். 18 இப்படி நான் பார்வோனாலும் அவனுடைய இரதங்களாலும் அவனுடைய குதிரைவீரர்களாலும் மகிமைப்படும்போது, நானே யெகோவா என்பதை எகிப்தியர்கள் அறிவார்கள் என்றார். 19 அப்பொழுது இஸ்ரவேலர்களின் சேனைக்கு முன்னாக நடந்த தேவதூதனானவர் விலகி, அவர்களுக்குப் பின்னாக நடந்தார்; அவர்களுக்கு முன்பு இருந்த மேகத்தூணிலும் விலகி, அவர்கள் பின்னே நின்றது. 20 அது எகிப்தியர்களின் சேனையும் இஸ்ரவேலர்களின் சேனையும் இரவுமுழுவதும் ஒன்றோடொன்று சேராதபடி அவைகள் நடுவில் வந்தது; எகிப்தியர்களுக்கு அது மேகமும் இருளாகவும் இருந்தது, இஸ்ரவேலர்களுக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று. 21 மோசே தன்னுடைய கையைக் கடலின்மேல் நீட்டினான்; அப்பொழுது யெகோவா இரவுமுழுவதும் பலத்த கிழக்குக் காற்றினால் கடல் ஒதுங்கும்படிச் செய்து, அதை வறண்டுபோகச்செய்தார்; தண்ணீர் பிளந்து பிரிந்துபோனது. 22 இஸ்ரவேலர்கள் கடலின் நடுவாக வறண்ட நிலத்தில் நடந்துபோனார்கள்; அவர்களுடைய வலதுபுறத்திலும் அவர்களுடைய இடதுபுறத்திலும் தண்ணீர் அவர்களுக்கு மதிலாக நின்றது. 23 அப்பொழுது எகிப்தியர்கள் அவர்களைத் தொடர்ந்து, பார்வோனுடைய எல்லாக் குதிரைகளோடும் இரதங்களோடும் குதிரைவீரர்களோடும் அவர்கள் பின்னால் கடலின் நடுவே நடந்துபோனார்கள். 24 காலை நேரத்தில் யெகோவா அக்கினியும் மேகமுமான மண்டலத்திலிருந்து எகிப்தியர்களின் சேனையைப் பார்த்து, அவர்களுடைய சேனையைக் கலங்கடித்து, 25 அவர்களுடைய இரதங்களிலிருந்து சக்கரங்கள் கழன்றுபோகவும், அவர்கள் தங்களுடைய இரதங்களை வருத்தத்தோடு நடத்தவும் செய்தார்; அப்பொழுது எகிப்தியர்கள்: “இஸ்ரவேலர்களைவிட்டு ஓடிப்போவோம், யெகோவா அவர்களுக்குத் துணைநின்று எகிப்தியர்களுக்கு விரோதமாக யுத்தம்செய்கிறார்” என்றார்கள். 26 யெகோவா மோசேயை நோக்கி: “தண்ணீர் எகிப்தியர்கள்மேலும் அவர்களுடைய இரதங்களின்மேலும் அவர்களுடைய குதிரைவீரர்களின்மேலும் திரும்பும்படி, உன்னுடைய கையைக் கடலின்மேல் நீட்டு” என்றார். 27 அப்படியே மோசே தன்னுடைய கையைக் கடலின்மேல் நீட்டினான்; அதிகாலையில் கடல் பலமாகத் திரும்பி வந்தது; எகிப்தியர்கள் அதற்கு எதிராக ஓடும்போது, யெகோவா அவர்களைக் கடலின் நடுவே அமிழ்த்திப்போட்டார். 28 தண்ணீர் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரர்களையும், அவர்கள் பின்னாக கடலில் நுழைந்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை. 29 இஸ்ரவேலர்களோ கடலின் நடுவாக வறண்ட நிலத்தின் வழியாக நடந்துபோனார்கள்; அவர்களுடைய வலதுபுறத்திலும் அவர்களுடைய இடதுபுறத்திலும் தண்ணீர் அவர்களுக்கு மதிலாக நின்றது. 30 இப்படியாகக் யெகோவா அந்த நாளிலே இஸ்ரவேலர்களை எகிப்தியர்களின் கைக்குத் தப்புவித்தார்; கடற்கரையிலே எகிப்தியர்கள் செத்துக்கிடக்கிறதை இஸ்ரவேலர்கள் கண்டார்கள். 31 யெகோவா எகிப்தியர்களில் செய்த அந்த மகத்தான செயல்களை இஸ்ரவேலர்கள் கண்டார்கள்; அப்பொழுது மக்கள் யெகோவாவுக்குப் பயந்து, யெகோவாவிடத்திலும் அவருடைய ஊழியக்காரனாகிய மோசேயினிடத்திலும் நம்பிக்கை வைத்தார்கள்.