Deuteronomy 31 (BOITCV)
1 பின்பு மோசே வெளியே போய் எல்லா இஸ்ரயேலருடனும் பேசிய வார்த்தைகளாவன: 2 “நான் இப்பொழுது நூற்று இருபது வயதுடையவனாய் இருக்கிறேன். தொடர்ந்து உங்களை வழிநடத்த என்னால் இயலாது. யெகோவா என்னிடம், ‘நீ யோர்தானைக் கடந்துபோகமாட்டாய்’ என்று சொல்லியிருக்கிறார். 3 உங்களுக்கு முன்பாக உங்கள் இறைவனாகிய யெகோவாவே வழிநடத்திச் செல்வார். அவர் இந்த நாடுகளை உங்களுக்கு முன்பாக அழிப்பார். அவர்களுடைய நாட்டை நீங்கள் உரிமையாக்கிக்கொள்வீர்கள். யெகோவா சொன்னபடியே யோசுவாவும் உங்களுக்கு முன்பாக யோர்தானைக் கடந்துபோவான். 4 உங்கள் இறைவனாகிய யெகோவா எமோரிய அரசர்களான சீகோனுக்கும், ஓகுக்கும் செய்ததை அவர்களுக்கும் செய்வார். அந்த அரசர்களை அவர்களுடைய நாட்டோடுகூட அழித்தாரே. 5 யெகோவா அந்த அவர்களை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுப்பார். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும், நீங்கள் அவர்களுக்குச் செய்யவேண்டும். 6 பலங்கொண்டு தைரியமாய் இருங்கள். அவர்களின் நிமித்தம் பயப்படவோ, திகிலடையவோ வேண்டாம், ஏனெனில் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு முன்பாகப் போகிறார். அவர் உங்களைவிட்டுப் பிரியவுமாட்டார்; உங்களைக் கைவிடவுமாட்டார்” என்றான். 7 பின்பு மோசே இஸ்ரயேலர் யாவருக்கும் முன்பாக யோசுவாவை அழைத்து அவனுக்குச் சொன்னதாவது, “பலங்கொண்டு தைரியமாயிரு, இம்மக்களுடைய முற்பிதாக்களுக்கு யெகோவா கொடுப்பதாக ஆணையிட்ட அந்த நாட்டிற்குள் நீ அவர்களுடன் செல்லவேண்டும். அதை நீ அவர்களுடைய உரிமைச்சொத்தாகப் பிரித்துக்கொடுக்கவேண்டும். 8 யெகோவாவே உனக்கு முன்பாகப் போகிறார். அவர் உன்னுடனேயே இருப்பார். அவர் ஒருபோதும் உன்னைவிட்டுப் பிரியவுமாட்டார்; உன்னைக் கைவிடவுமாட்டார்; நீ பயப்படாமலும் மனந்தளராமலும் இரு” என்றான். 9 எனவே மோசே இந்த சட்டத்தை எழுதி, யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கும் லேவியின் மகன்களான ஆசாரியர்களிடமும், இஸ்ரயேலின் சபைத்தலைவர்கள் அனைவரிடமும் கொடுத்தான். 10 பின்பு மோசே அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னதாவது: “கடன்களை ரத்துச்செய்யும் வருடமாகிய ஒவ்வொரு ஏழாம் வருடத்தின் முடிவிலும் கூடாரப்பண்டிகைக் காலத்தில் இந்த சட்டத்தை மக்களுக்குமுன் வாசிக்கவேண்டும். 11 இஸ்ரயேலர் எல்லோரும் உங்கள் இறைவனாகிய யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்திலே, அவருக்குமுன் வரும்போது, அவர்கள் கேட்கும்படியாக அவர்களுக்குமுன் இந்த சட்டத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். 12 ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், உங்கள் பட்டணத்தில் வசிக்கும் அந்நியர் ஆகிய மக்களை ஒன்றுகூட்டுங்கள். அவர்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பயந்துநடக்கவும், இந்த சட்டத்தின் எல்லா வார்த்தைகளையும், கவனமாகக் கைக்கொள்ளவும் கற்றுக்கொள்வதற்காக இதைக் கேட்கும்படி ஒன்றுகூட்டுங்கள். 13 இந்த சட்டத்தை அறியாத அவர்களுடைய பிள்ளைகளும், நீங்கள் யோர்தானைக் கடந்து உரிமையாக்கிக்கொள்ளப்போகும் அந்த நாட்டில் வாழும் காலமெல்லாம் அதைக்கேட்டு, உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பயந்துநடக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றான். 14 பின்பு யெகோவா மோசேயிடம், “நீ இறக்கும் நாள் நெருங்கிவிட்டது. யோசுவாவை அழைத்துக்கொண்டு சபைக் கூடாரத்திற்கு வா; அங்கே நான் அவனிடம் அவனுடைய பொறுப்பைக் கொடுப்பேன்” என்றார். அப்படியே மோசேயும், யோசுவாவும் சபைக் கூடாரத்தில் வந்து நின்றார்கள். 15 அப்பொழுது யெகோவா கூடாரத்தில் ஒரு மேகத்தூணில் காட்சியளித்தார். அந்த மேகம் கூடாரவாசலுக்கு மேலாக நின்றது. 16 யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “நீ உன் முற்பிதாக்களைப்போல சாகப்போகிறாய். இம்மக்களோ தாங்கள் போகும் தேசத்திலுள்ள அந்நிய தெய்வங்களைப் பின்பற்றி சீக்கிரமாய் வேசித்தனம் பண்ணுவார்கள். அவர்கள் என்னைக் கைவிட்டு நான் அவர்களுடன் செய்த உடன்படிக்கையை மீறுவார்கள். 17 அந்த நாளில் நான் அவர்களுடன் கோபங்கொண்டு அவர்களைக் கைவிட்டு விடுவேன். நான் அவர்களிடமிருந்து என் முகத்தை மறைத்துக்கொள்வேன். அவர்கள் அழிக்கப்படுவார்கள். அவர்கள்மேல் அநேக பேரழிவுகளும், பல துன்பங்களும் வரும். அந்த நாள் வரும்பொழுது அவர்கள், ‘எங்கள் இறைவன் எங்களுடன் இல்லாததினால் அல்லவோ இத்தீமைகள் எல்லாம் எம்மேல் வந்தன’ என்பார்கள். 18 அவர்கள் வேறு தெய்வங்களிடம் திரும்பியதன் மூலம் செய்யும் கொடுமையின் காரணமாக, அந்நாளில் நிச்சயமாக நான் என் முகத்தை மறைத்துக்கொள்வேன். 19 “ஆகவே இந்தப் பாடலை உங்களுக்காக எழுதி அதை இஸ்ரயேலருக்குப் படிப்பித்து அதை அவர்களைப் பாடும்படிசெய், அது அவர்களுக்கு விரோதமாகச் சொல்லப்படும் எனது சாட்சியாக இருக்கும். 20 நான் பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டிற்குள் அவர்களைக் கொண்டுவருவேன். அந்த நாட்டை தருவதாக நான் அவர்கள் முற்பிதாக்களுக்கு ஆணையிட்டு வாக்களித்தேன். அவர்கள் அங்கே திருப்தியாய் உண்டு செழுமை அடையும்போது, என்னைப் புறக்கணித்து, என் உடன்படிக்கையை மீறி வேறு தெய்வங்களிடம் திரும்பி அவற்றை வழிபடுவார்கள். 21 எனவே அநேக பேரழிவுகளும், துன்பங்களும் அவர்கள்மேல் வரும்பொழுது, இந்தப் பாடல் அவர்களுக்கு விரோதமாய்ச் சாட்சிகூறும். ஏனெனில் இந்தப் பாடலை அவர்களுடைய சந்ததியினர் மறக்கமாட்டார்கள். நான் ஆணையிட்டு வாக்குப்பண்ணிய அந்த நாட்டிற்குள் நான் அவர்களைக் கொண்டுவர முன்னரேயே அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை நான் அறிவேன்” என்றார். 22 அப்படியே மோசே அந்தப் பாடலை அந்த நாளிலேயே எழுதி இஸ்ரயேல் மக்களுக்குப் போதித்தான். 23 பின்பு யெகோவா நூனின் மகனாகிய யோசுவாவிடம் கட்டளையிட்டுச் சொன்னதாவது, “நீ பெலன்கொண்டு தைரியமாயிரு. நான் இஸ்ரயேலருக்கு ஆணையிட்டு வாக்குக்கொடுத்த நாட்டிற்குள் நீ அவர்களைக் கொண்டுபோவாய். நான், நானே உன்னோடு இருப்பேன்.” 24 மோசே இந்த சட்ட வார்த்தைகளையெல்லாம் ஒரு புத்தகத்தில், தொடக்கத்தில் இருந்து முடிவுவரை எழுதி முடித்தான். 25 அதன்பின்பு யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கும் லேவியருக்கு மோசே கொடுத்த கட்டளையாவது, 26 “இந்த சட்டப் புத்தகத்தை எடுத்து, உங்கள் இறைவனாகிய யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டிக்கு அருகே வையுங்கள். அது உங்களுக்கு விரோதமாக ஒரு சாட்சியாக அங்கே இருக்கும். 27 ஏனெனில், நீங்கள் கலகக்காரரும், பிடிவாதக்காரரும் என்பதை நான் அறிவேன். நான் உயிரோடு, உங்களுடன் இருக்கும்போதே யெகோவாவுக்கு விரோதமாகக் கலகம் பண்ணுகிறீர்களே! அப்படியானால் நான் இறந்தபின் எவ்வளவாய்க் கலகம் பண்ணுவீர்கள்? 28 உங்களுடைய கோத்திரங்களின் எல்லா சபைத்தலைவர்களையும், உங்கள் அதிகாரிகளையும் எனக்கு முன்பாகக் கூடிவரப்பண்ணுங்கள். நான் இந்த வார்த்தைகளை அவர்கள் கேட்கும்படியாகப் பேசி அவர்களுக்கு விரோதமான சாட்சியாக வானத்தையும் பூமியையும் அழைப்பேன். 29 ஏனெனில் என் சாவுக்குப்பிறகு நிச்சயமாய் நீங்கள் முற்றிலும் சீர்கெட்டு நான் உங்களுக்குக் கட்டளையிட்ட வழியைவிட்டு விலகுவீர்கள் என்று அறிந்திருக்கிறேன். வரப்போகும் நாட்களில் உங்கள்மேல் பேரழிவு வரும். யெகோவாவினுடைய பார்வையில் நீங்கள் தீமையைச் செய்து, உங்கள் கைகளின் செயலின் மூலம் அவருக்குக் கோபமூட்டுவதால் இந்த அழிவு நேரிடும்” என்றான். 30 பின்பு மோசே இந்தப் பாடலின் வார்த்தைகளைத் தொடக்கத்திலிருந்து முடிவுவரை முழு இஸ்ரயேலரும் கேட்கத்தக்கதாகக் கூறினான்:
In Other Versions
Deuteronomy 31 in the ANTPNG2D
Deuteronomy 31 in the BNTABOOT
Deuteronomy 31 in the BOHNTLTAL
Deuteronomy 31 in the BOILNTAP
Deuteronomy 31 in the KBT1ETNIK
Deuteronomy 31 in the TBIAOTANT