Joshua 24 (IRVT)
1 பின்பு யோசுவா இஸ்ரவேலின் கோத்திரங்களையெல்லாம் சீகேமிலே கூடிவரச்செய்து, இஸ்ரவேலின் மூப்பர்களையும், தலைவர்களையும், நியாயாதிபதிகளையும், அதிகாரிகளையும் வரவழைத்தான்; அவர்கள் தேவனுடைய சந்நிதியில் வந்து நின்றார்கள். 2 அப்பொழுது யோசுவா எல்லா மக்களையும் நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: பூர்வ காலத்திலே உங்களுடைய பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் நாகோருக்கும் தகப்பனான தேராகு என்பவன், ஐபிராத் நதிக்கு அப்பால் குடியிருந்தபோது அவர்கள் வேறு தெய்வங்களைத் தொழுதுகொண்டார்கள்; 3 நான் ஐபிரத் நதிக்கு அப்பால் இருந்த உங்களுடைய தகப்பனாகிய ஆபிரகாமை அழைத்துக்கொண்டுவந்து, அவனைக் கானான்தேசத்திலே வாழச்செய்து, அவனுடைய சந்ததியை மிகுதியாக்கி, அவனுக்கு ஈசாக்கைக் கொடுத்தேன். 4 ஈசாக்குக்கு யாக்கோபையும் ஏசாவையும் கொடுத்து, ஏசாவுக்குச் சேயீர் மலைத்தேசத்தைச் சுதந்தரிக்கும்படி கொடுத்தேன்; யாக்கோபும் அவன் பிள்ளைகளுமோ எகிப்திற்குப் போனார்கள்; 5 நான் மோசேயையும் ஆரோனையும் அனுப்பி, எகிப்தியர்களை வாதித்தேன்; அப்படி அவர்கள் நடுவிலே நான் செய்தபின்பு உங்களைப் புறப்படச்செய்தேன். 6 நான் உங்களுடைய பிதாக்களை எகிப்திலிருந்து புறப்படச் செய்தபோது, சிவந்த சமுத்திரத்தின் கரைக்கு வந்தீர்கள்; எகிப்தியர்கள் இரதங்களோடும், குதிரைவீரர்களோடும் உங்களுடைய பிதாக்களைச் சிவந்த சமுத்திரம்வரைப் பின்தொடர்ந்தார்கள். 7 அவர்கள் யெகோவா நோக்கிக் கூப்பிட்டார்கள்; அப்பொழுது அவர் உங்களுக்கும் எகிப்தியர்களுக்கும் நடுவில் இருளை வரச்செய்து, சமுத்திரத்தை அவர்கள்மேல் புரளச்செய்து, அவர்களை மூடிப்போட்டார்; நான் எகிப்திலே செய்ததை உங்களுடைய கண்கள் கண்டது; பின்பு வனாந்திரத்தில் அநேகநாட்கள் வாழ்ந்தீர்கள். 8 அதற்குப்பின்பு உங்களை யோர்தானுக்கு மறுபுறத்திலே குடியிருந்த எமோரியர்களின் தேசத்திற்குக் கொண்டுவந்தேன்; அவர்கள் உங்களோடு யுத்தம்செய்கிறபோது, அவர்களை உங்களுடைய கையில் ஒப்புக்கொடுத்தேன்; அவர்களுடைய தேசத்தை சுதந்தரித்துக்கொண்டீர்கள்; அவர்களை உங்களுக்கு முன்பாக அழித்துவிட்டேன். 9 அப்பொழுது சிப்போரின் மகனாகிய பாலாக் என்னும் மோவாபியர்களின் ராஜா எழும்பி, இஸ்ரவேலோடு யுத்தம்செய்து, உங்களைச் சபிப்பதற்காக, பேயோரின் மகனாகிய பிலேயாமை அழைத்தான். 10 பிலேயாமுக்குச் செவிகொடுக்க எனக்கு விருப்பம் இல்லாததினாலே, அவன் உங்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தான், இந்தவிதமாக உங்களை அவனுடைய கைகளிலிருந்து தப்புவித்தேன். 11 பின்பு யோர்தானைக் கடந்து எரிகோவுக்கு வந்தீர்கள்; எரிகோவின் குடிகளும், எமோரியர்களும், பெரிசியர்களும், கானானியர்களும், ஏத்தியர்களும், கிர்காசியர்களும், ஏவியர்களும், எபூசியர்களும், உங்களுக்கு எதிராக யுத்தம்செய்தார்கள்; ஆனாலும் அவர்களை நான் உங்களுடைய கைகளிலே ஒப்புக்கொடுத்தேன். 12 எமோரியர்களின் இரண்டு ராஜாக்களையும் உங்கள் பட்டயத்தாலும் உங்களுடைய வில்லாலும் நீங்கள் துரத்தவில்லை; நான் உங்களுக்கு முன்பாகக் குளவிகளை அனுப்பினேன்; அவைகள் அவர்களை உங்கள் முன்னிருந்து துரத்திவிட்டது. 13 அப்படியே நீங்கள் பண்படுத்தாத தேசத்தையும், நீங்கள் கட்டாத பட்டணங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகளில் குடியிருக்கிறீர்கள்; நீங்கள் நடாத திராட்சைத்தோட்டங்களின் பலனையும், ஒலிவத்தோப்புக்களின் பலனையும் சாப்பிடுகிறீர்கள் என்றார். 14 ஆகவே நீங்கள் யெகோவாவுக்குப் பயந்து, அவரை உத்தமமும் உண்மையுமாகத் தொழுதுகொண்டு, உங்களுடைய பிதாக்கள் ஐபிராத்து நதிக்கு அப்பாலும் எகிப்திலும் தொழுதுகொண்ட தெய்வங்களை அகற்றிவிட்டு, யெகோவாவைத் தொழுதுகொள்ளுங்கள். 15 யெகோவாவைத் தொழுதுகொள்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாகத் தெரிந்தால், பின்பு யாரைத் தொழுதுகொள்வீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்; நதிக்கு அப்பால் உங்களுடைய முற்பிதாக்கள் தொழுதுகொண்ட தெய்வங்களைத் தொழுதுகொள்வீர்களோ? நீங்கள் வாழ்கின்ற தேசத்தின் மக்களாகிய எமோரியர்களின் தெய்வங்களைத் தொழுதுகொள்வீர்களோ? நானும் என் வீட்டார்களுமோவென்றால், யெகோவாவையே தொழுதுகொள்ளுவோம் என்றான். 16 அப்பொழுது மக்கள் மறுமொழியாக: வேறு தெய்வங்களைத் தொழுதுகொள்ளும்படி, யெகோவாவை விட்டு விலகுகிற காரியம் எங்களுக்குத் தூரமாக இருப்பதாக. 17 நம்மையும் நம்முடைய முற்பிதாக்களையும் அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்து, நம்முடைய கண்களுக்கு முன்பாகப் பெரிய அடையாளங்களைச் செய்து, நாம் நடந்த எல்லா வழியிலும், நாம் கடந்து வந்த எல்லா மக்களுக்குள்ளும் நம்மைக் காப்பாற்றினவர் நம்முடைய தேவனாகிய யெகோவா தானே. 18 தேசத்திலே குடியிருந்த எமோரியர்கள் முதலான எல்லா மக்களையும் யெகோவா நமக்கு முன்பாகத் துரத்தினாரே; ஆகவே நாங்களும் யெகோவாவைத் தொழுதுகொள்ளுவோம், அவரே நம்முடைய தேவன் என்றார்கள். 19 யோசுவா மக்களை நோக்கி: நீங்கள் யெகோவாவைத் தொழுதுகொள்ளமாட்டீர்கள்; அவர் பரிசுத்தமுள்ள தேவன், அவர் எரிச்சலுள்ள தேவன்; உங்கள் மீறுதலையும் உங்கள் பாவங்களையும் மன்னிக்கமாட்டார். 20 யெகோவா உங்களுக்கு நன்மை செய்திருக்க, நீங்கள் யெகோவாவை விட்டு, அந்நிய தெய்வங்களைத் தொழுதுகொண்டால், அவர் திரும்பி உங்களுக்குத் தீமை செய்து, உங்களை அழிப்பார் என்றான். 21 மக்கள் யோசுவாவை நோக்கி: அப்படியல்ல, நாங்கள் யெகோவாவையே தொழுதுகொள்ளுவோம் என்றார்கள். 22 அப்பொழுது யோசுவா மக்களை நோக்கி: யெகோவாவைத் தொழுதுகொள்ளும்படி நீங்கள் அவரைத் தெரிந்துகொண்டதற்கு நீங்களே உங்களுக்குச் சாட்சிகள் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களே சாட்சிகள் என்றார்கள். 23 அப்பொழுது அவன்: அப்படியானால், இப்பொழுதும் உங்களுடைய நடுவே இருக்கிற அந்நிய தெய்வங்களை அகற்றிவிட்டு, உங்களுடைய இருதயத்தை இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு நேராகத் திருப்புங்கள் என்றான். 24 அப்பொழுது மக்கள் யோசுவாவை நோக்கி: நம்முடைய தேவனாகிய யெகோவாவையே தொழுதுகொண்டு, அவருடைய சத்தத்திற்கே கீழ்ப்படிவோம் என்றார்கள். 25 அந்தப்படி யோசுவா அந்த நாளில் சீகேமிலே மக்களோடு உடன்படிக்கைசெய்து, அவர்களுக்கு அதைப் பிரமாணமாகவும் கட்டளையாகவும் ஏற்படுத்தினான். 26 இந்த வார்த்தைகளை யோசுவா தேவனுடைய நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதி, ஒரு பெரிய கல்லை எடுத்து, அதை அங்கே யெகோவாவுடைய பரிசுத்த இடத்தின் அருகில் இருந்த கர்வாலி மரத்தின்கீழே நட்டு, 27 எல்லா மக்களையும் நோக்கி: இதோ, இந்தக் கல் நமக்குள்ளே சாட்சியாக இருப்பதாக; யெகோவா நம்மோடு சொன்ன எல்லா வார்த்தைகளையும் இது கேட்டது; நீங்கள் உங்களுடைய தேவனுக்கு எதிராகப் பொய்சொல்லாதபடி, இது உங்களுக்குச் சாட்சியாக இருப்பதாக என்று சொல்லி. 28 யோசுவா மக்களை அவரவர்களுடைய சொந்தமான தேசத்திற்கு அனுப்பிவிட்டான். 29 இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, நூனின் மகனாகிய யோசுவா என்னும் யெகோவாவுடைய ஊழியக்காரன் 110 வயதுள்ளவனாக மரணமடைந்தான். 30 அவனை எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள காயாஸ் மலைக்கு வடக்கே இருக்கிற திம்னாத் சேரா என்னும் அவனுடைய பங்கின் எல்லைக்குள்ளே அடக்கம் செய்தார்கள். 31 யோசுவா உயிரோடு இருந்த எல்லா நாட்களிலும், யெகோவா இஸ்ரவேலுக்குச் செய்த அவருடைய செயல்கள் அனைத்தையும் அறிந்து யோசுவாவிற்குப்பின்பு அநேகநாட்கள் உயிரோடு இருந்த மூப்பர்களுடைய எல்லா நாட்களிலும், இஸ்ரவேலர்கள் யெகோவாவைச் சேவித்தார்கள். 32 இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து கொண்டுவந்த யோசேப்பின் எலும்புகளை, அவர்கள் சீகேமிலே யாக்கோபு சீகேமின் தகப்பனாகிய எமோரியர்களுடைய மகன்களின் கையில் 100 வெள்ளிக்காசுக்கு வாங்கின நிலத்தின் பங்கிலே அடக்கம்செய்தார்கள்; அந்த நிலம் யோசேப்பின் சந்ததியினர்களுக்குச் சொந்தமானது. 33 ஆரோனின் மகனாகிய எலெயாசாரும் மரணமடைந்தான், அவனுடைய மகனாகிய பினெகாசுக்கு எப்பிராயீமின் மலைத்தேசத்திலே கொடுக்கப்பட்ட மேட்டிலே அவனை அடக்கம்செய்தார்கள்.