1 Chronicles 5 (BOITCV)
1 இஸ்ரயேலின் முதற்பேறான மகன் ரூபன். இவன் தன் தகப்பனின் திருமணப்படுக்கையைக் கறைப்படுத்தினபடியினால், அவனுடைய மூத்த மகனுக்குரிய பிறப்புரிமை இஸ்ரயேலின் மகன் யோசேப்பின் மகன்களுக்குக் கொடுக்கப்பட்டது. எனவே உரிமையின்படி இவன் வம்ச அட்டவணையில் முதற்பேறானவனாக இடம்பெறவில்லை. 2 யூதா தன் சகோதரரில் வலிமையுடையவனாய் இருந்தும், ஆளுநர் ஒருவனும் அவனிலிருந்து தோன்றியும் யோசேப்பிற்கே மூத்த மகனுக்குரிய பிறப்புரிமை கொடுக்கப்பட்டது. 3 இஸ்ரயேலின் மூத்த மகனான ரூபனின் மகன்கள்: ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ. 4 யோயேலின் சந்ததிகள்:யோயேலின் மகன் செமாயா, இவனது மகன் கோக்,இவனது மகன் சிமேயீ; 5 சீமேயின் மகன் மீகா,இவன் மகன் ராயா, இவன் மகன் பாகால், 6 பாகாலின் மகன் பேரா; பேரா ரூபனியரின் தலைவன். இவனை அசீரியாவின் அரசனான தில்காத்பில்நேசர் சிறைப்பிடித்துப் போனான். 7 அவர்கள் வம்ச ஒழுங்கின்படி, உறவினர்களின் வம்சங்களாகக் கணக்கிடப்பட்டனர்:அவர்கள் பிரதான தலைவன் ஏயேல், சகரியா, 8 யோயேலின் மகனான சேமாவுக்குப் பிறந்த ஆசாஸின் மகன் பேலா. இவர்கள் அரோயேரில் தொடங்கி, நேபோவுக்கும், பாகால் மெயோனில் உள்ள பகுதிகளில் வாழ்ந்தனர். 9 இவர்கள் கிழக்கே யூப்ரட்டீஸ் நதிவரைக்கும் பரந்திருந்து, பாலைவனத்துக்கு அருகே உள்ள நிலத்தில் வாழ்ந்துவந்தனர். ஏனெனில் கீலேயாத்தில் அவர்களுடைய வளர்ப்பு மிருகங்கள் மிகவும் பெருகியிருந்தன. 10 இவர்கள் சவுலின் ஆட்சிக்காலத்தில் ஆகாரியருடன் போரிட்டு, அவர்களைத் தோற்கடித்தார்கள். பின் இவர்கள் கீலேயாத்தின் முழு கிழக்குப்பகுதி பிரதேசத்திலும் இருந்த ஆகாரியரின் இடங்களில் குடியேறினர். 11 காத் மக்கள் அவர்களுக்கு அடுத்தாற்போல் பாசான் நாட்டில் சல்காவரை வாழ்ந்தனர். 12 அவர்களில் பாசானில் யோயேல் முதன்மையாகவும், சாப்பாம் இரண்டாவதாகவும் இருந்தனர். அவர்களுக்குப்பின் யானாய், சாப்பாத் ஆகியோர் தலைவர்களாயிருந்தனர். 13 அவர்களுடைய குடும்பங்களின்படி அவர்களின் உறவினர்கள்மிகாயேல், மெசுல்லாம், சேபா, யோராயி, யாக்கான், சீகா, ஏபேர் என மொத்தம் ஏழுபேர் இருந்தனர். 14 இவர்கள் அபியேலின் மகன்கள். அபியேல் ஊரியின் மகன்; ஊரி யெரொவாவின் மகன்; யெரொவா கீலேயாத்தின் மகன், கீலேயாத் மிகாயேலின் மகன், மிகாயேல் எசிசாயின் மகன், எசிசாய் யாதோவின் மகன், யாதோ பூஸின் மகன். 15 மேலும் கூனியின் மகனான அப்தியேலின் மகன் அகி அவர்களுடைய குடும்பத்தின் தலைவன். 16 காத் மக்கள் கீலேயாத்தைச் சேர்ந்த பாசானிலும், அடுத்திருந்த கிராமங்களிலும் சாரோனைச் சேர்ந்த வளமிக்க மேய்ச்சல் நிலங்களின் எல்லைவரைக்கும் வாழ்ந்தனர். 17 இந்த வம்ச அட்டவணைகள் எல்லாம் யூதாவின் அரசன் யோதாமின் ஆட்சிக்காலத்திலும், இஸ்ரயேலின் அரசன் யெரொபெயாமின் நாட்களிலும் வரிசைப்படுத்தப்பட்டது. 18 ரூபனியர், காத்தியர், மனாசேயின் அரைக் கோத்திரத்தினர் ஆகியோரில் போர் செய்யக்கூடியவர்கள் 44,760 பேர் இருந்தார்கள். இவர்கள் கேடயமும் வாளும் ஏந்தியும், வில்கொண்டும் போரிடுவதற்கும் பயிற்றுவிக்கப்பட்ட பலமிக்க மனிதராயிருந்தார்கள். 19 இவர்கள் ஆகாரியரோடும், யெத்தூர், நாபீஸ், நோதாப் நாட்டினரோடும் போரிட்டனர். 20 இறைவன் தன் மக்களுக்கு இந்த யுத்தங்களில் உதவி செய்தார். அவர் ஆகாரியரையும் அவர்களுடைய எல்லா பகைவர்களையும் இவர்களுடைய கையில் ஒப்புக்கொடுத்தார். ஏனெனில் இந்த யுத்தம் நடக்கும்போது அவர்கள் இறைவனிடம் கதறி அழுதனர். அவர்கள் யெகோவாவை நம்பியிருந்தபடியினால், அவர்களுடைய விண்ணப்பத்திற்கு அவர் பதிலளித்தார். 21 அவர்கள் ஆகாரியரின் வளர்ப்பு மிருகங்களான ஐம்பதாயிரம் ஒட்டகங்களையும், இரண்டுலட்சத்து ஐம்பதாயிரம் செம்மறியாடுகளையும், இரண்டாயிரம் கழுதைகளையும் கைப்பற்றினர். அத்துடன் ஒரு இலட்சம் மக்களையும் சிறைபிடித்தனர். 22 போர் இறைவனால் நடத்தப்பட்டதால், அநேகம்பேர் விழுந்து மடிந்தனர். இவர்கள் நாடுகடத்தப்படும்வரை அங்கேயே வாழ்ந்தனர். 23 மனாசேயின் பாதிக் கோத்திரம் எண்ணிக்கையில் பெருகியிருந்தது. இவர்கள் பாசான் தொடங்கி பாகால் எர்மோன் வரையும், அதாவது சேனீர் எர்மோன் வரையும் குடியிருந்தனர். இவை எர்மோன் மலையென்றும் அழைக்கப்பட்டன. 24 அவர்களுடைய குடும்பங்களின் தலைவர்கள் ஏப்பேர், இஷி, ஏலியேல், அஸ்ரியேல், எரேமியா, ஓதாவியா, யாதியேல் என்பவர்கள். இவர்கள் தைரியமிக்க போர்வீரர்களும், புகழ்ப்பெற்ற மனிதர்களும், குடும்பத் தலைவர்களுமாய் இருந்தனர். 25 ஆனால் அவர்கள் இறைவன் தங்கள் கண்களுக்கு முன்பாக அழித்துவிட்ட நாட்டு மக்களின் தெய்வங்களைப் பின்பற்றிய வேசித்தனத்தினால், அவர்கள் தங்கள் முற்பிதாக்கள் வழிபட்டுவந்த இறைவனுக்கு உண்மையற்றவர்களாய் நடந்து, துரோகம் செய்தனர். 26 எனவே இஸ்ரயேலின் இறைவன், தில்காத்பில்நேசர் என அழைக்கப்படும் அசீரிய அரசனான பூலின் ஆவியைத் தூண்டிவிட்டார். அவன் ரூபனியர், காத்தியர், மனாசேயின் பாதிக்கோத்திரத்தினர் ஆகியோரை நாடுகடத்தினான். அவன் அவர்களை ஆலா, ஆபோர், ஆரா, கோசான் நதிக்கரை ஆகிய இடங்களுக்குக் கொண்டுசென்றான். அவர்கள் இன்னும் அங்கேயே வாழ்கின்றனர்.
In Other Versions
1 Chronicles 5 in the ANTPNG2D
1 Chronicles 5 in the BNTABOOT
1 Chronicles 5 in the BOHNTLTAL
1 Chronicles 5 in the BOILNTAP
1 Chronicles 5 in the KBT1ETNIK
1 Chronicles 5 in the TBIAOTANT