Job 40 (BOITCV)
1 மேலும் யெகோவா யோபுவிடம் சொன்னதாவது: 2 “எல்லாம் வல்லவருடன் வாதாடுகிறவன் அவரைத் திருத்துவானோ?இறைவனைக் குற்றம் சாட்டுகிறவன் அவருக்குப் பதிலளிக்கட்டும்.” 3 யோபு யெகோவாவுக்கு மறுமொழியாக சொன்னது: 4 “நான் தகுதியற்றவன்; நான் உமக்கு என்ன பதிலளிக்க முடியும்?நான் என் கையினால் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன். 5 நான் ஒருமுறை பேசினேன், ஆமாம் இரண்டொருமுறை பேசினேன், ஆனால் என்னிடம் பதில் இல்லை;நான் இனிமேல் ஒன்றுமே சொல்லமாட்டேன்.” 6 அப்பொழுது யெகோவா பெருங்காற்றிலிருந்து யோபுவுடன் பேசினார்: 7 “இப்பொழுது நீ மனிதனைப்போல் திடமாய் நில்;நான் உன்னிடம் கேள்வி கேட்பேன்,நீ எனக்குப் பதில் சொல். 8 “நீ என் நீதியை அவமதிப்பாயோ?நீ உன்னை நீதியுள்ளவனாக்குவதற்கு, என்னைக் குற்றவாளியென்று தீர்ப்பாயோ? 9 உன் புயம் இறைவனுடையதைப் போன்றதோ?உன் குரல் அவருடைய குரலைப்போல் முழங்குமோ? 10 அப்படியானால் உன்னை மகிமையினாலும் மகத்துவத்தினாலும் அழகுபடுத்தி,மேன்மையையும் மாட்சிமையையும் உடுத்திக்கொள். 11 உன் கோபத்தின் சீற்றத்தை வீசி,பெருமையுள்ளவர்களைச் சிறுமைப்படுத்து. 12 பெருமையுள்ள ஒவ்வொரு மனிதனையும் பார்த்து அவர்களைத் தாழ்மைப்படுத்து;கொடியவர்களை அவர்கள் நிற்கும் இடத்திலேயே நசுக்கிப் போடு. 13 அவர்கள் எல்லோரையும் ஒன்றாய் தூசிக்குள் புதைத்துவிடு;கல்லறையின் உள்ளே அவர்களின் முகங்களை மூடிப்போடு. 14 அப்பொழுது உன் வலதுகையே உன்னை மீட்கும்என்று நானும் ஒத்துக்கொள்வேன். 15 “இப்பொழுது உன்னோடுகூடநான் படைத்த நீர்யானையைப் பார்;அது எருதைப் போலவே புல் மேய்கிறது. 16 அதின் இடுப்பிலுள்ள பலம் எவ்வளவு?அதின் வயிற்றின் தசைநார்களின் வலிமை எவ்வளவு? 17 அதின் வால் கேதுரு மரத்தைப்போல் அசைகிறது;அதின் இடுப்பு நரம்புகள் நெருக்கமாகப் பிணைந்திருக்கின்றன. 18 அதின் எலும்புகள் வெண்கலக் குழாய்களாகவும்,கால்கள் இரும்புத் தூண்களைப் போலவும் இருக்கின்றன. 19 இறைவனின் படைப்புகளில் இதுவே முதலிடம் பெறுகிறது;இருந்தும் அதைத் தமது வாளுடன் அணுக அதைப் படைத்தவரால் முடியும். 20 குன்றுகள் விளைச்சலைக் கொடுக்கும்;காட்டு விலங்குகளெல்லாம் அதனருகில் விளையாடும். 21 அது தாமரையின் கீழும்,நாணலின் மறைவில் சேற்றிலும் படுத்துக்கொள்ளும். 22 தாமரைகளின் நிழல் அதை மூடுகின்றன;ஆற்றலறிகள் அதைச் சூழ்ந்து நிற்கின்றன. 23 ஆறு பெருக்கெடுக்கும்போது அது திகிலடைவதில்லை;யோர்தான் நதி அதின் வாய்க்கெதிராகப் பெருக்கெடுத்து ஓடினாலும்,அது உறுதியாயிருக்கும். 24 அது பார்த்திருக்க அதை யார் பிடிக்கமுடியும்?மூக்கணாங்கயிறுபோட அதின் மூக்கை யார் குத்தமுடியும்?