1 Chronicles 21 (BOITCV)
1 சாத்தான் இஸ்ரயேலருக்கு எதிராக எழும்பி, இஸ்ரயேலரைக் கணக்கிடும்படி தாவீதைத் தூண்டினான். 2 எனவே தாவீது யோவாபிடமும், படைத் தலைவர்களிடமும், “நீங்கள் போய் பெயெர்செபா தொடங்கி தாண்வரை இருக்கும் இஸ்ரயேலரைக் கணக்கிடுங்கள். எத்தனைபேர் அங்கேயிருக்கிறார்கள் என்பதை நான் அறிந்துகொள்வதற்காக எனக்கு அதை அறிவியுங்கள்” என்றான். 3 ஆனால் யோவாப் அவனிடம், “யெகோவா தனது இராணுவவீரரை இப்போது இருப்பதைவிட நூறுமடங்காகப் பெருகச்செய்வாராக. என் தலைவனாகிய அரசனே, அவர்கள் எல்லோரும் எனது தலைவரின் குடிமக்கள் அல்லவா? எனது தலைவர் ஏன் இதைச் செய்ய விரும்புகிறீர்? இஸ்ரயேலின்மேல் இந்தக் குற்றப்பழியை ஏன் கொண்டுவருகிறீர்?” என்று பதிலளித்தான். 4 ஆனால் அரசனின் வார்த்தையோ யோவாப்பை மேற்கொண்டது. எனவே யோவாப் அவ்விடத்தை விட்டுப்போய் இஸ்ரயேல் முழுவதும் சுற்றித்திரிந்து எருசலேமுக்குத் திரும்பிவந்தான். 5 யோவாப் தாவீதிடம் போர்செய்யும் வீரர்களின் எண்ணிக்கையைத் தெரிவித்தான். இஸ்ரயேலில் வாளேந்தும் வீரர்கள் பதினொரு இலட்சம்பேரும், யூதாவில் நாலு இலட்சத்து எழுபதாயிரம்பேரும் இருந்தனர். 6 அரசனின் கட்டளை யோவாபுக்கு வெறுப்பூட்டியதனால், அவன் லேவியரையும், பென்யமீனியரையும் கணக்கெடுப்பில் சேர்த்துக்கொள்ளவில்லை. 7 இக்கட்டளை இறைவனுக்கு ஏற்காததாய் இருந்தபடியால் அவர் இஸ்ரயேலைத் தண்டித்தார். 8 அப்பொழுது தாவீது இறைவனிடம், “நான் இதைச் செய்தபடியால் பெரும் பாவம் செய்தேன். இப்பொழுதும் உமது அடியவனின் இந்தக் குற்றத்தை நீக்கிவிடும். நான் மகா புத்தியீனமான செயலைச் செய்தேன்” என மன்றாடினான். 9 யெகோவா தாவீதின் தரிசனக்காரனான காத்திடம், 10 “நீ போய் தாவீதிடம், ‘யெகோவா சொல்வது இதுவே: நான் உனக்கு மூன்று காரியங்களை உனக்குமுன் வைக்கிறேன். நான் உனக்கு எதிராகச் செயல்படுத்தும்படி அவற்றில் ஒன்றைத் தெரிந்துகொள்’ என்று சொல்” என்றார். 11 எனவே காத் தாவீதிடம்போய், “யெகோவா சொல்வது இதுவே: யெகோவா உனக்குமுன் வைக்கும் இந்த மூன்றிலிருந்து ஏதாவது ஒன்றைத் தெரிந்துகொள். 12 அதாவது, மூன்று வருடங்கள் பஞ்சம் வரும்; அல்லது மூன்று மாதங்கள் எதிரிகளினால் துரத்தப்பட்டு, அவர்களுடைய வாள் உங்களை மேற்கொள்ளும்; அல்லது மூன்று நாட்கள் யெகோவாவின் வாள், கொள்ளைநோயான இது இஸ்ரயேலின் ஒவ்வொரு பகுதியிலும் யெகோவாவின் வாளேந்தும் தூதனால் அழிவாக வரும். எனவே இப்பொழுது என்னை அனுப்பினவருக்கு நான் பதில்சொல்வதற்கு நீ தீர்மானித்துச் சொல்” என்றான். 13 தாவீது காத்திடம், “நான் இப்பொழுது பெரிய இக்கட்டில் அகப்பட்டிருக்கிறேன்; யெகோவா மிகவும் இரக்கமுடையவராகையால் நான் அவர் கையில் சரணடைவதையே விரும்புகிறேன். நான் மனிதர் கையில் விழாமல் இருக்கவேண்டும்” என்றான். 14 எனவே யெகோவா இஸ்ரயேலில் கொள்ளைநோயை வரப்பண்ணினார். அதனால் எழுபதாயிரம் இஸ்ரயேல் மக்கள் இறந்தனர். 15 அதோடு எருசலேமையும் அழிப்பதற்கு இறைவன் ஒரு தூதனை அனுப்பினார். ஆனாலும் தூதன் அழிக்கத் தொடங்கினவுடனேயே அவர்களுக்கேற்பட்ட அந்த பேரழிவைக்கண்டு யெகோவா மனதுருகினார். எனவே யெகோவா அழிக்கும் தூதனிடம், “போதும்! உன் கையை எடு” என்று சொன்னார். அப்பொழுது யெகோவாவினுடைய தூதன் எபூசியனான ஒர்னானின் சூடடிக்கும் களத்தில் நின்றான். 16 தாவீது மேலே பார்த்தபோது, யெகோவாவின் தூதன் தனது உருவிய வாளை எருசலேமுக்கு மேலாக நீட்டியபடி, வானத்திற்கும் பூமிக்கும் இடையில் நிற்கக் கண்டான். அப்பொழுது தாவீதும், முதியவர்களும் துக்கவுடை உடுத்தி, யெகோவாவுக்குமுன் தரையில் முகங்குப்புற விழுந்தனர். 17 தாவீது இறைவனிடம், “இராணுவவீரரைக் கணக்கிடும்படி கட்டளையிட்டவன் நான் அல்லவா? செய்யத்தகாததைச் செய்து பாவம் செய்தவன் நான்தானே! இந்த ஆடுகள் செய்தது என்ன? என் இறைவனாகிய யெகோவாவே, உம்முடைய கை எனக்கும் என் குடும்பத்திற்கும் விரோதமாய் இருக்கட்டும். இந்தக் கொள்ளைநோய் உமது மக்கள்மேல் இராதபடி செய்யும்” என மன்றாடினான். 18 அப்பொழுது யெகோவாவின் தூதன், எபூசியனான ஒர்னானின் சூடடிக்கும் களத்திற்குப் போய் அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படி தாவீதுக்கு சொல் என காத்திற்குக் கட்டளையிட்டார். 19 எனவே யெகோவாவின் பெயரால் காத் கூறியவற்றிக்குத் தாவீது கீழ்ப்படிந்தான். 20 அந்நேரத்தில் ஒர்னான் கோதுமையை சூடடித்துக் கொண்டிருந்தான். ஒர்னான் திரும்பிப் பார்த்தபோது தூதனைக் கண்டான்; அவனோடிருந்த அவனுடைய நான்கு மகன்களும் ஒளிந்துகொண்டனர். 21 தாவீது தன்னிடம் வருவதை ஒர்னான் கண்டபோது, உடனே அவன் சூடடிக்கும் களத்தை விட்டுப்போய் தாவீதுக்கு முன்னால் முகங்குப்புற விழுந்து வணங்கினான். 22 தாவீது ஒர்னானிடம், “கொள்ளைநோய் மக்களைவிட்டு நீங்கும்படியாக, நான் யெகோவாவுக்கு ஒரு பலிபீடம் கட்டுவதற்கு உன்னுடைய சூடடிக்கும் களத்தை கொடு. அதன் முழு விலையையும் நான் உனக்குத் தருகிறேன்” என்றான். 23 அதற்கு ஒர்னான் தாவீதிடம், “எனது தலைவனாகிய அரசர் அதை எடுத்து அவரது விருப்பப்படியெல்லாம் செய்வாராக. நான் தகனபலிக்குக் காளையையும், விறகிற்கு மரத்தாலான சூடடிக்கும் உருளைகளையும், தானிய காணிக்கைக்காக கோதுமையையும் தருவேன். இவை எல்லாவற்றையும் நான் தருவேன்” என்றான். 24 ஆனால் தாவீது அரசன் ஒர்னானிடம், “அப்படியல்ல, நான் முழு விலையையும் தருவேன். நான் யெகோவாவுக்கு உன்னிடத்திலிருந்து உன்னுடைய எதையும் எடுக்கவோ, நான் செலவு செய்யாமல் ஒரு காணிக்கையைப் பலியிடவோ மாட்டேன்” என்றான். 25 எனவே, தாவீது அந்த இடத்தின் மதிப்புக்குரிய அறுநூறு சேக்கல் நிறையுள்ள தங்கத்தை ஒர்னானுக்குக் கொடுத்தான். 26 அங்கே தாவீது அந்த இடத்தில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதில் யெகோவாவுக்கு தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் செலுத்தினான். அவன் யெகோவாவைக் கூப்பிட்டான். அப்போது யெகோவா வானத்திலிருந்து நெருப்பை தகனபலிபீடத்தில் இறங்கப்பண்ணி அவனுக்குப் பதிலளித்தார். 27 அப்போது யெகோவா தூதனிடம் பேசினார். அவன் தனது வாளை உறையில் போட்டான். 28 அந்த நேரத்தில் எபூசியனான ஒர்னானின் சூடடிக்கும் களத்தில் தனக்கு யெகோவா பதிலளித்ததால், தாவீது அங்கேயே பலிகளைச் செலுத்தினான். 29 மோசே பாலைவனத்தில் கட்டிய யெகோவாவின் கூடாரமும், தகன பலிசெலுத்தும் பலிபீடமும் அந்நாட்களில் கிபியோனின் மேட்டில் இருந்தது. 30 யெகோவாவின் தூதனின் வாளுக்குத் தாவீது பயந்ததினால், இறைவனிடம் விசாரிக்கும்படி அந்த பலிபீடத்திற்குமுன் போகமுடியவில்லை.
In Other Versions
1 Chronicles 21 in the ANTPNG2D
1 Chronicles 21 in the BNTABOOT
1 Chronicles 21 in the BOATCB2
1 Chronicles 21 in the BOGWICC
1 Chronicles 21 in the BOHNTLTAL
1 Chronicles 21 in the BOILNTAP
1 Chronicles 21 in the BOKHWOG
1 Chronicles 21 in the KBT1ETNIK
1 Chronicles 21 in the TBIAOTANT