1 Corinthians 11 (BOITCV)
1 நான் கிறிஸ்துவைப் பின்பற்றுவதுபோல, நீங்கள் என் முன்மாதிரியைப் பின்பற்றுங்கள். 2 நீங்கள் எப்பொழுதும் என்னை நினைவில் வைத்திருக்கிறதற்காகவும், நான் உங்களுக்குக் கற்றுக்கொடுத்தவற்றைத் தொடர்ந்து, அதேவிதமாய் கைக்கொள்ளுகிறதற்காகவும் நான் உங்களைப் பாராட்டுகிறேன். 3 ஒவ்வொரு மனிதனுக்கும் கிறிஸ்துவே தலைவராய் இருக்கிறார். ஒவ்வொரு பெண்ணுக்கும் அவளுடைய கணவனே தலைவனாயிருக்கிறான். கிறிஸ்துவுக்கு இறைவனே தலைவராய் இருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்று, விரும்புகிறேன். 4 எனவே தன் தலையை மூடிக்கொண்டு மன்றாடுகிறவனோ, அல்லது இறைவாக்கு உரைக்கிறவனோ, அவன் தன் தலைவராகிய கிறிஸ்துவை அவமதிக்கிறான். 5 ஒவ்வொரு பெண்ணும் தான் மன்றாடும்போது அல்லது இறைவாக்கு உரைக்கும்போது, தன் தலையை மூடிக்கொள்ளாத எந்தப் பெண்ணும், தன் தலைவனை அவமதிக்கிறாள். அது அவளது தலை மொட்டையடிக்கப்பட்டதற்கு சமமாயிருக்கும். 6 இவ்விதம் ஒரு பெண் தன் தலையை மூடிக்கொள்ளாவிட்டால், அவள் தன் தலைமுடியை வெட்டிக்கொள்ள வேண்டும். ஒரு பெண் தன் தலைமுடியை வெட்டிக்கொள்வதோ, தன் தலையை மொட்டையடிப்பதோ, அவளுக்கு வெட்கமாக இருக்குமென்றால், அவள் தன் தலையை மூடிக்கொள்ளவேண்டும். 7 ஒரு ஆண் தன் தலையை மூடிக்கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில், இறைவனுடைய சாயலையும் மகிமையையும் பிரதிபலிப்பவன் அவனே. ஆனால் பெண்ணோ மனிதனின் மகிமையைப் பிரதிபலிப்பாய் இருக்கிறாள். 8 ஏனெனில் ஆண் பெண்ணிலிருந்து படைக்கப்படவில்லை; பெண்ணே ஆணிலிருந்து படைக்கப்பட்டாள். 9 ஆண் பெண்ணுக்காகப் படைக்கப்படவில்லை. ஆனால் பெண்ணே ஆணுக்காகப் படைக்கப்பட்டாள். 10 இந்த காரணத்திற்காகவும், தூதர்களுக்காகவும், ஒரு பெண் தான் அதிகாரத்தின்கீழ் இருப்பதைக் காட்ட அவளது தலையை மூடிக்கொள்ளவேண்டும். 11 எவ்வாறாயினும், கர்த்தரின் ஒழுங்கின்படி ஒரு பெண், ஆண் இல்லாமல் இல்லை. ஒரு ஆண், பெண் இல்லாமல் இல்லை. 12 ஏனெனில் பெண் ஆணிலிருந்து படைக்கப்பட்டது போலவே, மனிதன் பெண்ணிலிருந்தே பிறக்கிறான். ஆனால், எல்லாம் இறைவனிடத்திலிருந்தே வருகின்றன. 13 ஒரு பெண் வழிபாட்டின்போது தலையை மூடிக்கொள்ளாமல், இறைவனை நோக்கி மன்றாடுவது தகுதியானதோ? நீங்களே தீர்மானியுங்கள். 14 ஒரு மனிதன் தன் தலைமுடியை நீளமாக வைத்துக்கொண்டால், அது அவனுக்குத் தகுந்தது அல்ல என்று இயற்கையும் உங்களுக்குக் போதிக்கிறதே? 15 ஆனால், ஒரு பெண் தனது தலைமுடியை நீளமாக வைத்துக்கொண்டால், அது அவளுக்கு மகிமையாயிருக்கும். நீளமான தலைமுடியே அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 16 இதைக்குறித்து யாரேனும் விவாதிக்க விரும்பினால், எங்களுக்கோ இறைவனின் திருச்சபைகளுக்கோ இவைத் தவிர வேறெந்த வழக்கமும் இல்லையென்று அறியுங்கள். 17 பின்வரும் விஷயத்தில் நான் உங்களுக்குக் கொடுக்கும் அறிவுரைகளில், நான் உங்களைப் புகழப் போகிறதில்லை, ஏனெனில் உங்கள் ஒன்றுகூடுதல் நன்மையைவிட தீமையையே விளைவிக்கின்றன. 18 முதலாவதாக, நீங்கள் திருச்சபையாகக் கூடிவரும்போது, உங்களிடையே பிரிவினைகள் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். அதை நான் ஓரளவு நம்புகிறேன். 19 உங்களிடையே பிரிவினைகள் இருக்கவேண்டும் என்பது உண்மைதான். அப்பொழுதுதான் யார் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுகிறவர்கள் என்பது தெளிவாகும். 20 நீங்கள் ஒன்றுகூடி வந்து, சாப்பிடுவது உண்மையில் கர்த்தருடைய திருவிருந்து அல்ல. 21 நீங்கள் சாப்பிடும் வேளையில், மற்றவருக்காகக் காத்திராமல் சாப்பிடுகிறீர்கள். இதனால் ஒருவன் பசியாயிருக்கிறான், மற்றவர்கள் குடித்து வெறிக்கிறார்கள். 22 சாப்பிடவும் குடிக்கவும் உங்களுக்கு வீடுகள் இல்லையோ? நீங்கள் இறைவனுடைய திருச்சபையை அவமதித்து, எளியவர்களை வெட்கப்படுத்துகிறீர்கள். உங்களுக்கு நான் என்ன சொல்வேன்? இதைக்குறித்து நான் உங்களைப் பாராட்டுவேனோ? நிச்சயமாக இல்லை. 23 கர்த்தர் எனக்குக் கற்றுக்கொடுத்ததையே நான் உங்களுக்குக் கொடுத்தேன்: கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவிலே அப்பத்தை எடுத்து, 24 நன்றி செலுத்திய பின்பு, அவர் அதைப் பிட்டு, “இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரம்; என்னை நினைவில் வைத்துக்கொள்ளும்படி இதைச் செய்யுங்கள்” என்றார். 25 அவ்விதமாகவே உணவை முடித்தபின்பு, அவர் அந்தப் பாத்திரத்தை எடுத்து, அவர்களுக்குச் சொன்னதாவது, “இந்தப் பாத்திரம், ஊற்றப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலான புதிய உடன்படிக்கை; இதை நீங்கள் பானம் பண்ணும்போதெல்லாம், என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள். 26 ஏனெனில், நீங்கள் இந்த அப்பத்தைச் சாப்பிட்டு, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும் பொழுதெல்லாம், கர்த்தர் திரும்ப வருமளவும், அவருடைய மரணத்தை பிரசித்தம் பண்ணுகிறீர்கள்” என்றார். 27 ஆனபடியால், யாராவது தகுதியற்ற விதத்தில் அப்பத்தைச் சாப்பிட்டாலோ, கர்த்தருடைய பாத்திரத்தைக் குடித்தாலோ, அவன் கர்த்தருடைய உடலுக்கும், அவருடைய இரத்தத்திற்கும் எதிராகப் பாவஞ்செய்யும் குற்றவாளியாகின்றான். 28 எனவே, ஒவ்வொருவனும் அப்பத்தைச் சாப்பிட்டு, பாத்திரத்திலிருந்து குடிக்குமுன், தன்னை ஆராய்ந்து பார்க்கவேண்டும். 29 ஏனெனில், ஒருவன் கர்த்தருடைய உடல் என்ற உணர்வு இல்லாமல், இதைச் சாப்பிட்டு குடித்தால், அவன் தன்மேல் நியாயத்தீர்ப்பை வருவித்துக்கொள்வதற்காகவே சாப்பிட்டுக் குடிக்கிறான். 30 இதனாலேயே உங்களில் பலர் பலவீனத்திற்கு உள்ளாகி வியாதிப்பட்டும் இருக்கிறனர். உங்களில் சிலர் மரண நித்திரைக்கும் உள்ளானார்கள். 31 ஆகவே, நம்மை நாமே நியாயந்தீர்த்துக்கொண்டால், நாம் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டோம். 32 அப்படியிருந்தும், நாம் கர்த்தரால் நியாயந்தீர்க்கப்படும்போது, நாம் அவரால் தண்டிக்கப்பட்டு சீர்ப்படுத்தப்படுகிறோம். இதனால், நாம் உலகத்தவர்களோடு குற்றவாளிகளாய்த் தீர்க்கப்படமாட்டோம். 33 ஆகையால் பிரியமானவர்களே, நீங்கள் திருச்சபையாக சாப்பிட ஒன்றுகூடி வரும்போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள். 34 யாராவது பசியாயிருந்தால், அவன் வீட்டிலேயே சாப்பிடவேண்டும். அப்பொழுது நீங்கள் ஒன்றுகூடி வரும்போது, தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டீர்கள்.மற்ற விஷயங்களைக்குறித்த அறிவுரைகளை, நான் வரும்போது உங்களுக்குக் கொடுப்பேன்.
In Other Versions
1 Corinthians 11 in the ANGEFD
1 Corinthians 11 in the ANTPNG2D
1 Corinthians 11 in the BNTABOOT
1 Corinthians 11 in the BOATCB
1 Corinthians 11 in the BOATCB2
1 Corinthians 11 in the BOGWICC
1 Corinthians 11 in the BOHLNT
1 Corinthians 11 in the BOHNTLTAL
1 Corinthians 11 in the BOILNTAP
1 Corinthians 11 in the BOKCV2
1 Corinthians 11 in the BOKHWOG
1 Corinthians 11 in the BOKSSV
1 Corinthians 11 in the BOLCB2
1 Corinthians 11 in the BONUT2
1 Corinthians 11 in the BOPLNT
1 Corinthians 11 in the BOTLNT
1 Corinthians 11 in the KBT1ETNIK
1 Corinthians 11 in the SBIBS2
1 Corinthians 11 in the SBIIS2
1 Corinthians 11 in the SBIIS3
1 Corinthians 11 in the SBIKS2
1 Corinthians 11 in the SBITS2
1 Corinthians 11 in the SBITS3
1 Corinthians 11 in the SBITS4
1 Corinthians 11 in the TBIAOTANT
1 Corinthians 11 in the TBT1E2