2 Corinthians 11 (BOITCV)
1 என் மதியீனத்தை நீங்கள் சற்றுப் பொறுத்துக்கொள்வீர்கள் என நான் எதிர்பார்க்கிறேன். ஆம்; நீங்கள் ஏற்கெனவே சகித்தும் இருக்கிறீர்கள். 2 நான் உங்களைக் கிறிஸ்து என்ற ஒரே கணவருக்கே திருமணம் செய்து கொடுக்கவே வாக்குப்பண்ணியிருக்கிறேன். இப்படி உங்களை ஒரு தூய்மையான கன்னிகையாகக் கொடுக்கவே விரும்புகிறேன். இதனாலேயே இறைவனுக்குத் தன் மக்கள்மேல் இருக்கிற வைராக்கியம், எனக்கும் உங்கள்மேல் இருக்கிறது. 3 பாம்பு தனது சூழ்ச்சியினாலே ஏவாளை ஏமாற்றியது. அதுபோலவே உங்கள் மனதில் கிறிஸ்துவுக்கு இருக்கிற உண்மையிலும், தூய்மையான பக்தியிலுமிருந்து, நீங்கள் வழிவிலகி நடத்தப்படுவீர்களோ என்று, நான் பயப்படுகிறேன். 4 ஏனெனில் யாராவது உங்களிடம் வந்து, நாங்கள் பிரசங்கிக்காத ஒரு வித்தியாசமான இயேசுவைப் பிரசங்கிக்கும் போதும், நீங்கள் பெற்றுக்கொண்ட பரிசுத்த ஆவியானவரைத் தவிர, வேறொரு ஆவியை அறிமுகப்படுத்தும் போதும், நீங்கள் ஏற்றுக்கொண்ட நற்செய்தியைவிட, வேறொரு நற்செய்தியைக் கொண்டுவரும்போது, அவற்றை எளிதாக ஏற்றுக்கொள்கிறீர்கள். 5 அந்த “மாண்புமிகு அப்போஸ்தலர்களை” விட நான் எவ்வகையிலும் குறைவுபட்டவனல்ல என எண்ணுகிறேன். 6 நான் ஒரு பயிற்சி பெற்ற பேச்சாளனாய் இல்லாதிருந்தாலும், எனக்கு அறிவு உண்டு என்பதை எல்லாவிதத்திலும் உங்களுக்கு மிகவும் தெளிவுபடுத்தியே இருக்கிறோம். 7 நான் இறைவனுடைய நற்செய்தியை இலவசமாய் உங்களுக்குப் பிரசங்கித்தபோது, நீங்கள் உயர்வடையும்படி நான் என்னைத் தாழ்த்தினேன். இப்படிச் செய்தது பாவமா? 8 நான் உங்களுக்குப் பணிசெய்வதற்காக மற்றத் திருச்சபைகளிடமிருந்து உதவி பெற்றுக்கொண்டேன். இப்படி உங்களுக்காக நான் அவர்களைக் கொள்ளையிட்டேன். 9 நான் உங்களுடன் இருக்கையில், எனக்குத் தேவையேற்பட்டபோது, அதற்காக நான் யாருக்கும் கஷ்டம் கொடுக்கவில்லை. ஏனெனில் எனக்குத் தேவையானவற்றையெல்லாம், மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர்களே கொடுத்து உதவினார்கள். நான் முன்பு செய்ததுபோலவே இனிமேலும், என்னுடைய தேவைகளுக்காக எவ்விதத்திலும் உங்களுக்குப் பாரமாயிருக்க மாட்டேன். 10 கிறிஸ்துவின் உண்மை எனக்குள் இருப்பது நிச்சயம்போலவே, அகாயா பகுதியிலுள்ள யாரும் என்னுடைய இந்தப் பெருமைபாராட்டுதலை நிறுத்தமுடியாது என்பதும் நிச்சயம். 11 ஏன் இதை இப்படிச் சொல்கிறேன்? நான் உங்களில் அன்பாயிராததினாலா? நான் உங்களில் அன்பாயிருக்கிறேன் என்பதை இறைவன் அறிவார். 12 நாங்கள் ஊழியம் செய்கிறதுபோலவே, தாங்களும் ஊழியம் செய்வதாக பெருமை பேசிக்கொள்கிறவர்கள், அப்படிச் சொல்ல இயலாதபடி நான் இவ்விதமே தொடர்ந்து செய்வேன். 13 ஏனெனில், இப்படிப்பட்ட மனிதர் பொய்யான அப்போஸ்தலர்கள். கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரைப்போல் வேஷம் தரித்து, ஏமாற்றுகிற வேலைக்காரர்கள். 14 அதில் ஆச்சரியமில்லை. ஏனெனில், சாத்தானுங்கூட ஒளியின் தூதனைப்போல் வேஷம் தரித்துக்கொள்கிறான். 15 எனவே அவனுடைய வேலைக்காரர்களும், நீதியின் ஊழியக்காரர்கள்போல் வேஷம் தரித்து ஏமாற்றுவது புதுமையான ஒன்று அல்ல. அவர்களின் முடிவோ தங்கள் செயல்களுக்கேற்ற பலனாயிருக்கும். 16 நான் மறுபடியும் சொல்கிறேன்: நான் ஒரு முட்டாள் என்று ஒருவரும் நினைக்கவேண்டாம். அப்படி நீங்கள் நினைத்தால், என்னை முட்டாளாகவே ஏற்றுக்கொண்டு, நான் இன்னும் பெருமையடித்துக் கொள்வதையும் சிறிது கேளுங்கள். 17 இந்தப் பெருமை பேசும் விஷயத்தில் நான் கர்த்தர் விரும்பிய விதத்தில் பேசவில்லை. நான் ஒரு முட்டாளைப் போலவே பேசுகிறேன். 18 பலர் உலகரீதியாகப் பெருமை பேசுகிறார்கள். நானும் அப்படியே பெருமை பேசுவேன். 19 நீங்களோ எவ்வளவு பெரிய ஞானிகள்! முட்டாள்களை மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொள்கிறீர்கள். 20 உங்களை அடிமைப்படுத்துகிறவனையும், உங்களைச் சுரண்டிப் பிழைக்கிறவனையும், உங்களைத் தன் நலனுக்காகப் பயன்படுத்துகிறவனையும், உங்கள் மத்தியில் பெருமையாய் நடக்கிறவனையும் உங்கள் முகத்தில் அடிக்கிறவனையும், நீங்கள் மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொள்கிறீர்கள். 21 நாங்களோ இப்படிப்பட்டவைகளைச் செய்யமுடியாத அளவுக்குப் பலவீனர்களாய் இருந்தோம்! இதை நான் வெட்கத்துடன் ஒத்துக்கொள்கிறேன்.ஆனால், யாராவது எதைக் குறித்தாவது பெருமைப்படத் துணிந்தால், அவ்விதமாய் பெருமைப்பட்டுக்கொள்ள, நானும் துணிவேன். நான் ஒரு மூடனைப்போல் இதையும் சொல்கிறேன். 22 அவர்கள் எபிரெயரா? அப்படியானால் நானும் எபிரெயன்தான். அவர்கள் இஸ்ரயேலரா? அப்படியானால், நானும் இஸ்ரயேலன்தான். அவர்கள் ஆபிரகாமின் சந்ததிகளா? அப்படியானால், நானும் ஆபிரகாமின் சந்ததிதான். 23 நான் ஒரு பைத்தியக்காரனைப்போல, பேசுகிறேன். அவர்கள் கிறிஸ்துவின் ஊழியரா? அப்படியானால், நான் அவர்களைவிட மிகச்சிறந்த ஊழியன். நான் இந்த ஊழியத்தில் கடுமையாக உழைத்தேன். பலமுறை சிறையில் அடைக்கப்பட்டேன். அதிகமாக அடிக்கப்பட்டேன். அநேகந்தரம் மரணத் தருவாயில் இருந்தேன். 24 நாற்பது அடிகளுக்கு ஒன்று குறைவாக யூதரினால் ஐந்துமுறை சவுக்கால் அடிக்கப்பட்டேன். 25 மூன்றுதரம் தடியால் அடிக்கப்பட்டேன். ஒருதரம் என்மேல் கல்லெறிந்தார்கள். மூன்றுமுறை நான் பயணம் செய்த கப்பல்கள் உடைந்து சிதைந்தன. ஒருமுறை இரவும் பகலுமாக நடுக்கடலில் கிடந்தேன். 26 ஓயாது பிரயாணம் செய்தேன். அப்பொழுது ஆறுகளில் ஆபத்துக்குள்ளானேன். கொள்ளைக்காரராலும் ஆபத்து ஏற்பட்டது. எனது சொந்த நாட்டு மக்களாலும் ஆபத்து வந்தது; அந்நியராலும் ஆபத்து வந்தது. பட்டணத்திலும் ஆபத்து வந்தது; நாட்டுப்புறத்திலும் ஆபத்து வந்தது; கடலிலும் ஆபத்து வந்தது. கள்ளச் சகோதரராலும் எனக்கு ஆபத்து வந்தது. 27 கடின உழைப்புக்கும், கஷ்டத்திற்கும் உள்ளானேன். பல இரவுகள் நித்திரையின்றியும் இருந்தேன். பசியும், தாகமும் உடையவனாக இருந்தேன். பலமுறை உணவு இல்லாமலும் இருந்தேன். குளிருக்குள் அகப்பட்டும், உடை இல்லாதவனாகவும் இருந்தேன். 28 இவை எல்லாவற்றையும்விட, எல்லாத் திருச்சபைகளையும் குறித்து எனக்கிருக்கிற அக்கறையினால் வரும் கவலை நாள்தோறும் என்னை நெருக்கியது. 29 யாராவது பலவீனமானவனாக இருந்தால், அந்தப் பலவீனத்தைக் குறித்து நான் அக்கறை கொள்ளாதிருப்பேனோ? யாராவது பாவத்திற்குள் வழிநடத்தப்பட்டால், அதைக்குறித்து என் உள்ளத்தில் கொதிப்படையாதிருப்பேனோ? 30 நான் பெருமைபாராட்ட வேண்டுமானால், எனது பலவீனத்தைக் காண்பிக்கும் காரியங்களைக்குறித்தே நான் பெருமைபாராட்டுவேன். 31 இறைவனும் கர்த்தராகிய இயேசுவின் பிதாவுமானவர், நான் சொல்வது பொய் அல்ல என்று அறிவார். அவரே என்றென்றைக்கும் துதிக்கப்பட வேண்டியவர். 32 தமஸ்குவில் அரேத்தா அரசனின் கீழே ஆளுநராய் இருந்தவன், என்னைக் கைதுசெய்வதற்காக தமஸ்கருடையப் பட்டணத்தைச் சுற்றிக் காவல் ஏற்படுத்தியிருந்தான். 33 ஆனால் சிலர் என்னை ஒரு கூடையில் வைத்து, பட்டணத்து மதிலிலிருந்த, ஒரு ஜன்னலின் வழியாக என்னை இறக்கிவிட்டார்கள். இவ்விதம் அந்த ஆளுநரின் கைக்கு நான் தப்பினேன்.
In Other Versions
2 Corinthians 11 in the ANGEFD
2 Corinthians 11 in the ANTPNG2D
2 Corinthians 11 in the BNTABOOT
2 Corinthians 11 in the BOATCB
2 Corinthians 11 in the BOATCB2
2 Corinthians 11 in the BOGWICC
2 Corinthians 11 in the BOHLNT
2 Corinthians 11 in the BOHNTLTAL
2 Corinthians 11 in the BOILNTAP
2 Corinthians 11 in the BOKCV2
2 Corinthians 11 in the BOKHWOG
2 Corinthians 11 in the BOKSSV
2 Corinthians 11 in the BOLCB2
2 Corinthians 11 in the BONUT2
2 Corinthians 11 in the BOPLNT
2 Corinthians 11 in the BOTLNT
2 Corinthians 11 in the KBT1ETNIK
2 Corinthians 11 in the SBIBS2
2 Corinthians 11 in the SBIIS2
2 Corinthians 11 in the SBIIS3
2 Corinthians 11 in the SBIKS2
2 Corinthians 11 in the SBITS2
2 Corinthians 11 in the SBITS3
2 Corinthians 11 in the SBITS4
2 Corinthians 11 in the TBIAOTANT
2 Corinthians 11 in the TBT1E2