Ecclesiastes 2 (BOITCV)
1 “வா, இப்பொழுது நன்மையானது என்னவென்று கண்டுபிடிக்கும்படி இன்பத்தை அனுபவித்துச் சோதித்துப் பார்ப்போம்” என்று நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன். ஆனால் அதுவும் அர்த்தமற்றது என்று நிரூபிக்கப்பட்டது. 2 சிரிப்பு மூடத்தனமானது என்றும், இன்பம் என்ன பலனைக் கொடுக்கிறது என்றும் நான் சொன்னேன். 3 திராட்சை இரசத்தினால் என்னை உற்சாகப்படுத்தியும், மூடத்தனமாயும் நடந்து பார்த்தேன்; அப்பொழுது இன்னும் என் மனமே ஞானத்தினால் எனக்கு வழிகாட்டிக் கொண்டிருந்தது. மனிதர் தங்களுடைய வாழ்வின் குறுகிய நாட்களில், வானத்தின் கீழே செய்யப் பயனுள்ளது என்ன என்று பார்க்க விரும்பினேன். 4 பெரிய வேலைகளைச் செய்தேன்; எனக்காக வீடுகளைக் கட்டினேன், திராட்சைத் தோட்டங்களை உண்டாக்கினேன். 5 அழகிய சோலைகளையும் பூந்தோட்டங்களையும் எனக்காக உண்டாக்கி, எல்லாவித பழமரங்களையும் அதில் நட்டேன். 6 செழித்து வளர்ந்த தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்குக் குளங்களைக் கட்டினேன். 7 ஆண்களையும் பெண்களையும் அடிமைகளாக வாங்கினேன்; மேலும் வீட்டில் பிறந்த அடிமைகளையும் வைத்திருந்தேன். எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும், அதிகமான ஆட்டு மந்தைகளும் மாட்டு மந்தைகளும் எனக்கிருந்தன. 8 நான் தங்கத்தையும் வெள்ளியையும் எனக்கெனக் குவித்தேன்; அரசர்களிடமிருந்தும் மாகாணங்களிலிருந்தும் கிடைத்த செல்வங்களைச் சேர்த்தேன். பாடகர்களும் பாடகிகளும் எனக்கிருந்தனர்; மனித இருதயத்திற்கு மகிழ்ச்சியைக் கொடுப்பவர்களான பல பெண்களையும் வைத்திருந்தேன். 9 எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும் நான் மிகப்பெரியவனானேன். இவை எல்லாவற்றின் மத்தியிலும் என் ஞானம் என்னைவிட்டு நீங்காமல் இருந்தது. 10 என் கண்கள் ஆசை வைத்த எதையும் நான் பெறாமல் விடவில்லை;என் இருதயத்துக்கு எந்த இன்பங்களையும் நான் கொடுக்க மறுக்கவில்லை.என் எல்லா வேலையிலும் என் இருதயம் மகிழ்ந்தது,என் எல்லா உழைப்புக்குமான வெகுமதி இதுவே. 11 அப்படியிருந்தும் என் கைகள் செய்த எல்லாவற்றையும்,அவற்றை அடைய நான் பட்ட பிரசாயத்தையும் பார்த்தபோது,இவை யாவும் அர்த்தமற்றவையாகவே இருந்தன,எல்லாம் காற்றைத் துரத்திப்பிடிக்கும் முயற்சியே;சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை. 12 பின்பு நான் ஞானத்தை ஆராய்ந்து பார்க்கவும்,பைத்தியக்காரத்தனத்தையும் மூடத்தனத்தையும் அறிந்துகொள்ளவும்என் மனதை திருப்பினேன்.அரசனுக்குப்பின் அவனுடைய இடத்தில் வருகிறவன்,முன்பு அவனால் செய்யப்பட்டதைப் பார்க்கிலும் இவனால் அதிகமாய் என்ன செய்யமுடியும்? 13 இருளைப் பார்க்கிலும் வெளிச்சம் நல்லதாய் இருப்பதுபோலவே,மூடத்தனத்தைப் பார்க்கிலும் ஞானம் நல்லது எனக் கண்டேன். 14 ஒரு ஞானமுள்ளோரின் கண்கள் வெளிச்சத்தை நோக்கியிருக்கின்றன,மூடரோ இருளில் நடப்பார்கள்;ஆனால் அவர்கள் இருவருக்கும் ஒரே முடிவே ஏற்படுகிறது என்பதைநான் உணர்ந்துகொண்டேன். 15 பின்பு நான், மூடரின் முடிவே என்னையும் மேற்கொள்ளும்,“ஆகவே ஞானமுள்ளவனாய் இருப்பதால்நான் பெறும் இலாபம் என்ன?” என்றுஎன் இருதயத்தில் சிந்தித்தேன்.“இதுவும் அர்த்தமற்றதே” என்று என் இருதயத்தில் சொல்லிக்கொண்டேன். 16 மூடரைப் போலவே ஞானமுள்ளோரும் நெடுங்காலம் ஞாபகத்தில் இருக்கமாட்டார்கள்;வருங்காலத்தில் இருவரும் மறக்கப்பட்டுப் போவார்கள்.மூடரைப் போலவே, ஞானமுள்ளோரும் இறந்துபோவார்கள். 17 சூரியனுக்குக் கீழே செய்யப்படுவதெல்லாம் எனக்குத் துக்கமாகவே இருந்தது, ஆதலால் நான் வாழ்க்கையை வெறுத்தேன். அவையாவும் அர்த்தமற்றவை, எல்லாம் காற்றைத் துரத்திப்பிடிக்கும் முயற்சிக்கு ஒப்பானது. 18 சூரியனுக்குக் கீழே நான் பிரயாசப்பட்டு பெற்றதையெல்லாம் நான் வெறுத்தேன். ஏனெனில், அவற்றை நான் எனக்குப்பின் வருவோருக்கு விட்டுச்செல்ல வேண்டுமே. 19 அவர்கள் ஞானமுள்ளோராய் இருப்பார்களோ, அல்லது மூடராயிருப்பார்களோ என்று யார் அறிவார்? சூரியனுக்குக் கீழே என் முயற்சியையும் திறமையையும் உபயோகித்து நான் செய்த எல்லா வேலைகள்மேலும் அவர்கள் அதிகாரம் செலுத்துவார்களே. இதுவும் அர்த்தமற்றதே. 20 எனவே சூரியனுக்குக் கீழேயுள்ள என் பிரயாசங்களின் முயற்சி அனைத்தையும் குறித்து, என் இருதயம் விரக்தியடையத் தொடங்கியது. 21 ஏனெனில் ஒரு மனிதர்கள் தன் வேலையை ஞானத்துடனும், அறிவுடனும், திறமையுடனும் செய்கிறார்கள்; ஆகிலும் அவர்கள் தங்களுக்கு உரிமையான அனைத்தையும் அதற்காகப் பிரயாசப்படாத வேறொருவருக்கு விட்டுச்செல்ல நேரிடுகிறதே. இதுவும் அர்த்தமற்றதும், பெரும் தீமையாய் இருக்கிறது. 22 சூரியனுக்குக் கீழே மனிதர்கள் மிகவும் பிரயாசப்பட்டும், கவலையுடன் போராடியும் உழைப்பதினால், அவர்கள் பெறும் இலாபம் என்ன? 23 அவர்களுடைய வாழ்நாளெல்லாம் அவர்கள் செய்யும் வேலை, வேதனையும் துன்பமுமே; இரவிலும் அவர்களுடைய மனம் இளைப்பாறுவதில்லை. இதுவும் அர்த்தமற்றதே. 24 சாப்பிட்டு, குடித்து தங்கள் வேலையில் திருப்தி காண்பதைவிட, அவர்கள் செய்யக்கூடிய நலமானது ஒன்றும் இல்லை. இதுவும் இறைவனின் கரத்திலிருந்து வருகிறது என்று நான் காண்கிறேன். 25 அவராலேயன்றி உணவு சாப்பிடவோ, சந்தோஷமாயிருக்கவோ யாரால் முடியும்? 26 இறைவனைப் பிரியப்படுத்துகிற மனிதருக்கு அவர் ஞானத்தையும், அறிவையும், மகிழ்ச்சியையும் கொடுக்கிறார். ஆனால் பாவிகளுக்கோ, இறைவனைப் பிரியப்படுத்துபவர்களுக்குக் கொடுக்கும்படி, செல்வத்தைச் சேர்த்துக் குவித்து வைக்கும் வேலையைக் கையளிக்கிறார். இதுவும் அர்த்தமற்றதே, காற்றைத் துரத்திப்பிடிக்கும் ஒரு முயற்சியே.
In Other Versions
Ecclesiastes 2 in the ANTPNG2D
Ecclesiastes 2 in the BNTABOOT
Ecclesiastes 2 in the BOHNTLTAL
Ecclesiastes 2 in the BOILNTAP
Ecclesiastes 2 in the KBT1ETNIK
Ecclesiastes 2 in the TBIAOTANT