John 4 (BOITCV)
1 யோவானைவிட இயேசு அநேகம் பேரைச் சீடராக்கி, அவர்களுக்கு திருமுழுக்கு கொடுக்கிறார் எனப் பரிசேயர் கேள்விப்பட்டார்கள். 2 ஆனால் திருமுழுக்கு கொடுத்தது இயேசு அல்ல, அவருடைய சீடரே அதைச் செய்தார்கள். 3 பரிசேயர் கேள்விப்பட்டதைக் கர்த்தர் அறிந்தபோது, அவர் யூதேயாவைவிட்டுப் புறப்பட்டுத் திரும்பவும் கலிலேயாவுக்குச் சென்றார். 4 இயேசு சமாரியா வழியாகப் போகவேண்டியிருந்தது. 5 எனவே அவர் சமாரியாவிலுள்ள சீகார் என்னும் பட்டணத்திற்கு வந்தார். அது யாக்கோபு தன் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்தின் அருகேயிருந்தது. 6 அங்கே யாக்கோபின் கிணறு இருந்தது. இயேசு பிரயாணத்தினால் களைப்படைந்தவராய், கிணற்றின் அருகே உட்கார்ந்தார். அப்பொழுது நேரம் நண்பகல் பன்னிரண்டு மணியாயிருந்தது. 7 அவ்வேளையில் சமாரிய பெண் ஒருத்தி தண்ணீர் மொள்ளுவதற்கு வந்தாள். இயேசு அவளிடம், “நீ எனக்குக் குடிப்பதற்குத் தண்ணீர் தருவாயா?” என்று கேட்டார். 8 அப்பொழுது அவருடைய சீடர்கள் உணவு வாங்கும்படி பட்டணத்திற்கு போயிருந்தார்கள். 9 அந்தச் சமாரியப் பெண் இயேசுவிடம், “நீர் ஒரு யூதன், நானோ ஒரு சமாரியப் பெண். என்னிடம் நீர் எப்படித் தண்ணீர் கேட்கலாம்?” என்று கேட்டாள். ஏனெனில் யூதர் சமாரியருடன் பழகுவதில்லை. 10 இயேசு அவளுக்குப் பதிலாக, “நீ இறைவனுடைய வரத்தையும், உன்னிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்கிற நான் யார் என்பதையும் அறிந்திருந்தால், நீயே என்னிடத்தில் தண்ணீர் கேட்டிருப்பாய். நான் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பேன்” என்றார். 11 அதற்கு அந்தப் பெண், “ஐயா, தண்ணீர் மொள்ளுவதற்கு உம்மிடம் ஒன்றும் இல்லை; கிணறும் ஆழமாய் இருக்கிறது. எங்கிருந்து இந்த ஜீவத்தண்ணீர் கிடைக்கும்? 12 நம்முடையத் தந்தை யாக்கோபு எங்களுக்கு இந்தக் கிணற்றைக் கொடுத்தாரே; இந்த கிணற்றிலிருந்து அவரும் அவருடைய பிள்ளைகளும் தண்ணீர் குடித்து, தங்கள் ஆடு மாடுகளுக்கும் தண்ணீர் கொடுத்தார்களே. எங்கள் தந்தை யாக்கோபைப் பார்க்கிலும் நீர் பெரியவரோ?” என்று கேட்டாள். 13 இயேசு அதற்குப் பதிலாக, “இந்தத் தண்ணீரைக் குடிக்கிற ஒவ்வொருவரும் மீண்டும் தாகமடைவார்கள். 14 ஆனால் நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவர்களோ, ஒருபோதும் தாகமடையமாட்டார்கள். உண்மையாகவே, நான் அவர்களுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவர்களுக்குள்ளே ஒரு நீரூற்றாக நித்திய ஜீவனாய் பொங்கி வழியும்” என்றார். 15 அந்தப் பெண் அவரிடம், “ஐயா, அந்தத் தண்ணீரை எனக்குத் தாரும்; அப்பொழுது நான் இனிமேல் தாகமடைய மாட்டேன். தண்ணீர் மொள்ளுவதற்கு இங்கே வரவேண்டிய அவசியமும் எனக்கு இராது” என்றாள். 16 அப்பொழுது இயேசு அவளிடம், “நீ போய் உன் கணவனை கூட்டிக்கொண்டு வா” என்றார். 17 “அதற்கு அவள், எனக்கு கணவன் இல்லை,” என்றாள்.இயேசு அவளிடம், “எனக்குக் கணவன் இல்லை என்று நீ சொன்னது சரிதான். 18 ஐந்து கணவன்மார் உனக்கு இருந்தார்களே, இப்பொழுது உன்னுடன் இருக்கிறவன் உன்னுடைய கணவன் அல்ல. நீ சொன்னது உண்மைதான்” என்றார். 19 அப்பொழுது அந்தப் பெண், “ஐயா, நீர் ஒரு இறைவாக்கினர் என்று நான் கண்டுகொண்டேன். 20 எங்கள் தந்தையர் இங்கிருக்கும் மலையிலே இறைவனை வழிபட்டார்கள். ஆனால் யூதர்களான நீங்களோ, வழிபட வேண்டிய இடம் எருசலேமிலேயே இருக்கிறது என்று சொல்கிறீர்கள்” என்றாள். 21 அதற்கு இயேசு: “அம்மா, நீ என்னை நம்பு; நீங்கள் பிதாவை இந்த மலையிலும், எருசலேமிலும் வழிபடாத காலம் வருகிறது. 22 சமாரியராகிய நீங்களோ அறியாததையே ஆராதிக்கிறீர்கள்; யூதர்களாகிய நாங்களோ அறிந்திருப்பவரையே ஆராதிக்கிறோம். ஏனெனில் யூதரிடமிருந்தே இரட்சிப்பு வருகிறது. 23 ஆனால் ஒரு காலம் வருகிறது, அது இப்பொழுதே வந்துவிட்டது. உண்மையாய் ஆராதிக்கிறவர்கள், அப்பொழுது பிதாவை ஆவியிலும் உண்மையிலும் ஆராதிப்பார்கள். ஏனெனில் அவ்விதம் தன்னை ஆராதிக்கிறவர்களையே பிதா தேடுகிறார். 24 இறைவன் ஆவியாயிருக்கிறார். அவரை ஆராதிக்கிறவர்கள் ஆவியிலும் உண்மையிலும் அவரை ஆராதிக்க வேண்டும்” என்றார். 25 அந்தப் பெண் அவரிடம், “கிறிஸ்து எனப்பட்ட மேசியா வருகிறார். அவர் வரும்போது எல்லாவற்றையும் அவர் எங்களுக்கு விளக்கிக் கூறுவார் என்று எனக்குத் தெரியும்” என்றாள். 26 அதற்கு இயேசு அவளிடம், “உன்னுடன் பேசுகிற நானே அவர்” என்று அறிவித்தார். 27 அப்பொழுது இயேசுவின் சீடர்கள் திரும்பிவந்து, அவர் ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு வியப்படைந்தார்கள். ஆனால் யாரும் அவரிடம், “உமக்கு என்ன தேவைப்படுகிறது? நீர் ஏன் அவளுடன் பேசுகிறீர்?” என்று கேட்கவில்லை. 28 அப்பொழுது அந்தப் பெண் தண்ணீர் குடத்தை அங்கேயே விட்டுவிட்டு, பட்டணத்திற்குள்ளே போய் அங்குள்ள மக்களிடம், 29 “வாருங்கள், நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்ன ஒருவரை வந்து பாருங்கள். ஒருவேளை அவர்தான் கிறிஸ்துவோ?” என்றாள். 30 அவர்கள் பட்டணத்தைவிட்டு வெளியேறி இயேசு இருந்த இடத்திற்கு வந்தார்கள். 31 இதற்கிடையில் அவருடைய சீடர்கள், “போதகரே, சாப்பிடுங்கள்” என்று அவரைக் கேட்டுக்கொண்டார்கள். 32 அதற்கு இயேசு அவர்களிடம், “நான் சாப்பிடுவதற்கு நீங்கள் அறியாத உணவு எனக்கு இருக்கிறது” என்றார். 33 அப்பொழுது அவருடைய சீடர்கள், “யாராவது அவருக்கு உணவு கொடுத்திருப்பார்களோ?” என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள். 34 இயேசு அவர்களிடம், “என்னை அனுப்பினவருடைய சித்தத்தைச் செய்து, அவருடைய வேலையை முடிப்பதே எனது உணவு. 35 ‘இன்னும் நான்கு மாதங்கள் இருக்கின்றன. அதற்குப் பின்பு அறுவடை வந்துவிடும்’ என்று நீங்கள் சொல்வதில்லையா? நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் உங்கள் கண்களைத் திறந்து வயல்களை நோக்கிப்பாருங்கள்! அவை விளைந்து அறுவடைக்கு ஆயத்தமாக இருக்கின்றன. 36 இப்பொழுதும்கூட அறுவடை செய்பவன் கூலியைப் பெறுகிறான். இப்பொழுதே அவன் நித்திய ஜீவனுக்கான விளைச்சலை அறுவடை செய்கிறான்; இதனால் விதைக்கிறவனும் அறுவடை செய்கிறவனும் ஒன்றாய் மகிழ்ச்சியடைகிறார்கள். 37 இவ்விதம், ‘ஒருவன் விதைக்கிறான், இன்னொருவன் அறுவடை செய்கிறான்’ என்ற பழமொழியும் உண்மையாகிறது. 38 நீங்கள் வேலைசெய்து விளைவிக்காததை அறுவடை செய்ய நான் உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் கடுமையாய் உழைத்தார்கள். அவர்களுடைய உழைப்பின் பலனை நீங்கள் அறுவடை செய்தீர்கள்” என்றார். 39 அந்தப் பட்டணத்திலிருந்த சமாரியர் அநேகர் இயேசுவை விசுவாசித்தார்கள். ஏனெனில், “நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார்” என்று இயேசுவைக்குறித்து அந்தச் சமாரியப் பெண் சாட்சி கூறியிருந்தாள். 40 எனவே அந்தச் சமாரியர் அவரிடம், தங்களுடன் வந்து தங்கும்படி அவரைக் கேட்டுக்கொண்டார்கள். இயேசு அவர்களுடன் இரண்டு நாட்கள் தங்கினார். 41 அவருடைய வார்த்தைகளைக் கேட்டு இன்னும் அதிகமானோர் விசுவாசிகளானார்கள். 42 அவர்கள் அந்தப் பெண்ணிடம், “நாங்கள் அவரை நம்புவது நீ சொன்னதைக் கேட்டுமட்டுமல்ல; இப்பொழுது நாங்களே அவர் சொன்னவற்றைக் கேட்டோம். இவர் உண்மையிலேயே உலகத்தின் இரட்சகர் என்பதை அறிந்துகொண்டோம்” என்றார்கள். 43 இரண்டு நாட்களுக்குப்பின் இயேசு கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். 44 ஒரு இறைவாக்கினனுக்கு தனது சொந்த நாட்டிலே மதிப்பு இல்லை என்று இயேசு தாமே குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார். 45 இயேசு கலிலேயாவுக்கு வந்தபோது, கலிலேயர்கள் அவரை வரவேற்றார்கள். பஸ்கா என்ற பண்டிகையின்போது அவர் எருசலேமில் செய்ததையெல்லாம் கலிலேயர் கண்டிருந்தார்கள். ஏனெனில் பண்டிகையின்போது அவர்களும் அங்கே இருந்தார்கள். 46 இயேசு மீண்டும் ஒருமுறை கலிலேயாவிலுள்ள கானாவூருக்குச் சென்றார். அங்குதான் அவர் தண்ணீரைத் திராட்சைரசமாக மாற்றினார். அங்கே கப்பர்நகூமிலே இருந்த ஒரு அரச அதிகாரியின் மகன் நோயுற்றுப் படுத்திருந்தான். 47 இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தாரென்று இந்த அதிகாரி கேள்விப்பட்டதும், அவரிடத்திற்குப் போய், மரணத் தருவாயில் இருக்கும் தனது மகனை இயேசு, வந்து குணமாக்க வேண்டுமென்று அவரைக் கெஞ்சினான். 48 இயேசு அவனிடம், “நீங்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் கண்டாலொழிய, ஒருபோதும் விசுவாசிக்கமாட்டீர்கள்” என்றார். 49 அதற்கு அந்த அரச அதிகாரி, “ஐயா, எனது பிள்ளை சாகுமுன்னே வாரும்” என்றான். 50 இயேசு அதற்குப் பதிலாக, “நீ திரும்பிப்போ. உன் மகன் உயிர்வாழ்வான்” என்றார்.அவன் இயேசுவின் வார்த்தையை விசுவாசித்து புறப்பட்டுப் போனான். 51 அவன் வழியில் போய்க் கொண்டிருக்கும்போதே, அவனுடைய வேலைக்காரர் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனுடைய மகன் பிழைத்திருக்கிறான் என்ற செய்தியை அறிவித்தார்கள். 52 தனது மகன் சுகமடைந்த நேரத்தைப்பற்றி அவன் விசாரித்தபோது, அவர்கள் அவனிடம், “நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு அவனுக்கிருந்த காய்ச்சல் நீங்கியது” என்றார்கள். 53 இயேசு தன்னிடம், “உனது மகன் உயிர்வாழ்வான்” என்று தனக்குச் சொன்ன நேரம், சரியாக அதே நேரம்தான் என்று தகப்பன் புரிந்து கொண்டான். எனவே அவனும், அவனுடைய குடும்பத்தாரும் இயேசுவை விசுவாசித்தார்கள். 54 இது இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தபின் செய்த இரண்டாவது அடையாளம் ஆகும்.