Proverbs 11 (IRVT)
1 கள்ளத்தராசு யெகோவாவுக்கு அருவருப்பானது;சரியான நிறைகல்லோ அவருக்குப் பிரியம். 2 அகந்தை வந்தால் அவமானமும் வரும்;தாழ்ந்த சிந்தை உள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு. 3 செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்;துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும். 4 கோபாக்கினை நாளில் செல்வம் உதவாது;நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும். 5 உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்;துன்மார்க்கனோ தன்னுடைய துன்மார்க்கத்தினால் விழுவான். 6 செம்மையானவர்களுடைய நீதி அவர்களைத் தப்புவிக்கும்;துரோகிகளோ தங்களுடைய தீவினையிலே பிடிபடுவார்கள். 7 துன்மார்க்கன் மரணமடையும்போது அவனுடைய நம்பிக்கை அழியும்;அக்கிரமக்காரர்களின் எதிர்பார்ப்பு கெட்டுப்போகும். 8 நீதிமான் இக்கட்டிலிருந்து விடுவிக்கப்படுவான்;அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான். 9 மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான்;நீதிமானோ அறிவினால் தப்புகிறான். 10 நீதிமான்கள் நன்றாக இருந்தால் பட்டணம் சந்தோஷமாக இருக்கும்;துன்மார்க்கர்கள் அழிந்தால் கெம்பீரம் உண்டாகும். 11 செம்மையானவர்களுடைய ஆசீர்வாதத்தினால் பட்டணம் நிலைபெற்று ஓங்கும்;துன்மார்க்கர்களுடைய வாயினால் அது இடிந்துவிழும். 12 மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்;புத்திமானோ தன்னுடைய வாயை அடக்கிக்கொண்டிருக்கிறான். 13 புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்;ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான். 14 ஆலோசனையில்லாத இடத்தில் மக்கள் விழுந்துபோவார்கள்;அநேக ஆலோசனைக்காரர்கள் உண்டானால் சுகம் உண்டாகும். 15 அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் மிகுந்த பாடுபடுவான்;பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாக இருப்பான். 16 நல்லொழுக்கமுள்ள பெண் மானத்தைக் காப்பாள்;பலசாலிகள் செல்வத்தைக் காப்பார்கள். 17 தயவுள்ள மனிதன் தன்னுடைய ஆத்துமாவுக்கு நன்மை செய்துகொள்ளுகிறான்;கொடூரனோ தன்னுடைய உடலை அலைக்கழிக்கிறான். 18 துன்மார்க்கன் வீண்வேலையைச் செய்கிறான்;நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான். 19 நீதி வாழ்வுக்கு ஏதுவாகிறதுபோல,தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்திற்கு ஏதுவாகிறான். 20 மாறுபாடுள்ள இருதயமுடையவர்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்;உத்தம வழியில் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியமானவர்கள். 21 கையோடு கைகோர்த்தாலும், கெட்டவன் தண்டனைக்குத் தப்பான்;நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும். 22 மதிகேடாக நடக்கிற அழகுள்ள பெண்,பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமம். 23 நீதிமான்களுடைய ஆசை நன்மையே;துன்மார்க்கர்களுடைய நம்பிக்கையோ கோபத்தின் தண்டனையாக முடியும். 24 வாரி இறைத்தும் விருத்தியடைந்தவர்களும் உண்டு;அதிகமாக தனக்கென்று மட்டும் வைத்துக்கொண்டும்வறுமையடைபவர்களும் உண்டு. 25 உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்;எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும். 26 தானியத்தைக் கட்டிவைக்கிறவனை மக்கள் சபிப்பார்கள்;விற்கிறவனுடைய தலையின்மேல் ஆசீர்வாதம் தங்கும். 27 நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்;தீமையைத் தேடுகிறவனுக்கோ தீமையே வரும். 28 தன்னுடைய செல்வத்தை நம்புகிறவன் விழுவான்;நீதிமான்களோ துளிரைப்போல தழைப்பார்கள். 29 தன்னுடைய வீட்டைக் கலைக்கிறவன் காற்றைச் சுதந்தரிப்பான்;மூடன் ஞானமுள்ளவனுக்கு அடிமையாவான். 30 நீதிமானுடைய பலன் ஜீவமரம்;ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன். 31 இதோ, நீதிமானுக்கு பூமியில் சரிக்கட்டப்படுமே; துன்மார்க்கனுக்கும்பாவிக்கும் எத்தனை அதிகம்.