Isaiah 49 (BOITCV)
1 தீவுகளே, நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள்;தூரத்திலுள்ள நாடுகளே, நீங்கள் இதைக் கேளுங்கள்:நான் கர்ப்பத்திலிருந்தபோதே யெகோவா என்னை அழைத்தார்;என் தாயின் வயிற்றில் இருக்கும்போதே என் பெயரைச் சொல்லி கூப்பிட்டார். 2 அவர் எனது வாயை ஒரு கூரிய வாளைப்போல் ஆக்கினார்,தமது கரத்தின் நிழலிலே என்னை மறைத்தார்;என்னைக் கூர்மையான அம்பாக்கி,தமது அம்பாறத் துணியில் மறைத்து வைத்தார். 3 “இஸ்ரயேலே, நீ என் ஊழியக்காரன்,எனது சிறப்பை உன்னிலே வெளிப்படுத்துவேன்” என்று அவர் என்னிடம் சொன்னார். 4 ஆனால் நானோ, “வீணாக உழைக்கிறேன்;எனது பெலனை பயனற்றவற்றிற்கும் வீணானவற்றிற்கும் செலவழிக்கிறேன்.அப்படியிருந்தும், எனக்குரியது யெகோவாவின் கையிலே இருக்கிறது;என்னுடைய வெகுமதியும் எனது இறைவனிடமே இருக்கிறது” என்றேன். 5 இப்பொழுது யெகோவா சொல்வதாவது:யாக்கோபைத் தன்னிடம் திரும்பக் கொண்டுவரும்படியாகவும்,இஸ்ரயேலர்களைத் தன்னிடம் கூட்டிச் சேர்க்கும்படியாகவும்அவருடைய பணியாளனாய் இருக்கும்படி என்னைக் கருப்பையில் உருவாக்கியவர் அவரே.யெகோவாவினுடைய பார்வையில் நான் கனம் பெற்றேன்;என் இறைவனே என் பெலனாயிருக்கிறார். 6 அவர் சொல்வதாவது:“யாக்கோபின் கோத்திரங்களைப் பழைய நிலைக்குக் கொண்டுவருவதற்காகவும்,இஸ்ரயேலில் நான் மீதியாக வைத்திருப்பவர்களைத் திரும்பக் கொண்டுவருவதற்காகவும்,நீர் மட்டும் பணியாளனாய் இருப்பது போதுமானதல்லவே.ஆகவே நான் உம்மைப் பிற நாட்டு மக்களுக்கும் ஒரு வெளிச்சமாக ஏற்படுத்துவேன்;எனவே நீர் பூமியின் கடைசியில் இருக்கிறவர்களுக்கெல்லாம்என் இரட்சிப்பைக் கொண்டுவருவீர்” என்கிறார். 7 இஸ்ரயேலரின் பரிசுத்தரும், மீட்பருமான யெகோவா சொல்வது இதுவே:அவமதிக்கப்பட்டு, நாடுகளால் அருவருக்கப்பட்டு,ஆட்சியாளர்களுக்கு அடிமையாய் இருந்த உனக்குச் சொல்வதாவது,“அரசர்கள் உன்னைக் காணும்போது அவர்கள் எழுந்து நிற்பார்கள்,பிரபுக்கள் உன்னைக் கண்டு வணங்குவார்கள்;யெகோவா உண்மையுள்ளவராய் இருப்பதாலும்,இஸ்ரயேலின் பரிசுத்தர் உன்னைத் தெரிந்துகொண்டதினாலும்அவர்கள் இப்படிச் செய்வார்கள்.” 8 யெகோவா சொல்வது இதுவே:“என் தயவின் காலத்திலே நான் உங்களுக்குப் பதிலளிப்பேன்,இரட்சிப்பின் நாளில் நான் உங்களுக்கு உதவி செய்வேன்;நான் உங்களைப் பாதுகாத்து,மக்களிடையே நீங்கள் ஒரு உடன்படிக்கையாக இருக்கும்படி நான் உங்களை ஏற்படுத்துவேன்.நாட்டைப் புதுப்பித்து பழைய நிலைக்குக் கொண்டுவரவும்,பாழடைந்த உரிமைச் சொத்துக்களைத் திரும்ப ஒப்படைக்கவும், 9 சிறைப்பட்டிருக்கிறவர்களைப் பார்த்து,‘புறப்பட்டுப் போங்கள்’ என்று சொல்லவும்,இருளில் உள்ளவர்களைப் பார்த்து, ‘வெளிப்படுங்கள்!’என்றும் சொல்லவும் இப்படிச் செய்வேன். “வீதிகளின் ஓரங்களில் அவர்கள் மேய்வார்கள்;வறண்ட குன்றுகள் ஒவ்வொன்றிலும் அவர்கள் மேய்ச்சல் நிலத்தைக் காண்பார்கள். 10 அவர்கள் பசியடைவதுமில்லை, தாகங்கொள்வதுமில்லை;பாலைவன வெப்பமோ, வெயிலோ அவர்களைத் தாக்காது.அவர்கள்மேல் இரக்கமாயிருக்கிறவரே அவர்களுக்கு வழிகாட்டி,அவர்களைத் தண்ணீர் ஊற்றுகளின் அருகே வழிநடத்திச் செல்வார். 11 எனது எல்லா மலைகளையும் நான் வழிகளாக மாற்றுவேன்;எனது பெரும் பாதைகள் உயர்த்தப்படும். 12 இதோ, அவர்கள் தூரத்திலிருந்து வருவார்கள்,சிலர் வடக்கிலிருந்தும், சிலர் மேற்கிலிருந்தும்,சிலர் சீனீம் பிரதேசத்திலிருந்தும் வருவார்கள்.” 13 வானங்களே, ஆனந்த சத்தமிடுங்கள்;பூமியே, சந்தோஷப்படு;மலைகளே, கெம்பீரமாய்ப் பாடுங்கள்!யெகோவா தமது மக்களைத் தேற்றுகிறார்,துன்புற்ற தம்முடையவர்கள்மேல் இரக்கம் காட்டுவார். 14 ஆனால் சீயோனோ, “யெகோவா என்னைக் கைவிட்டுவிட்டார்;யெகோவா என்னை மறந்துவிட்டார்” என்கிறது. 15 “தான் பாலூட்டும் தன்னுடைய குழந்தையை எந்தத் தாயும் மறந்துபோவாளோ?கருவில் உருவான தனது பிள்ளைக்கு அவள் கருணை காட்டாதிருப்பாளோ?அப்படி அவள் மறந்தாலுங்கூட,நான் உன்னை மறப்பதில்லை. 16 இதோ, நான் என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்;உன் மதில்கள் எப்பொழுதும் என் கண்முன் இருக்கின்றன. 17 உனது பிள்ளைகள் விரைந்து திரும்புவார்கள்,உன்னை அழித்தவர்கள் உன்னைவிட்டு விலகிப் போவார்கள். 18 உன் கண்களை உயர்த்திச் சுற்றிலும் பார்;உனது பிள்ளைகள் யாவரும் ஒன்றுகூடி உன்னிடம் வருகிறார்கள்.நான் வாழ்வது நிச்சயமாய் இருப்பதுபோலவே,நீ அவர்களையெல்லாம் நகைகளாய் அணிந்துகொள்வாய்;மணமகளைப்போல் அவர்களை அணிந்துகொள்வாய்” என்று யெகோவா அறிவிக்கிறார். 19 “நீ அழிக்கப்பட்டு பாழாக்கப்பட்டாய்,உனது நாடு பாழாய் விடப்பட்டது.ஆயினும் இப்பொழுதோ உன்னில் குடியிருக்கிறவர்கள்வாழ்வதற்கு இடம் போதாதபடி நீ சிறிதாய் இருப்பாய்.உன்னை விழுங்கியவர்களும் உன்னைவிட்டுத் தூரமாய் போவார்கள். 20 உன் இழப்பில் துயருற்ற நாட்களில்உனக்குப் பிறந்த பிள்ளைகள் உன்னைப் பார்த்து,‘இந்த இடம் எங்களுக்கு மிகச் சிறிதாக இருக்கிறது;நாங்கள் வசிப்பதற்கு போதிய இடம் தாரும்’என உன் செவிகள் கேட்கும்படி சொல்லுவார்கள். 21 அப்பொழுது நீ உனது உள்ளத்தில்‘எனக்கு இந்தப் பிள்ளைகளைக் கொடுத்தது யார்?நான் துயருற்றவளாகவும் மலடியாகவும் இருந்தேன்;நான் நாடுகடத்தப்பட்டவளாகவும், புறக்கணிக்கப்பட்டவளாகவும் இருந்தேன்.யார் இந்தப் பிள்ளைகளை வளர்த்தெடுத்தார்கள்?இதோ நான் தனித்தவளாயிருந்தேனே!ஆனால் இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்?’ என்று சொல்லிக்கொள்வாய்.” 22 ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே:“இதோ, நான் பிற நாட்டவர்களை கைகாட்டி அழைப்பேன்,மக்கள் கூட்டங்களுக்கு எனது கொடியை ஏற்றுவேன்.அவர்கள் உங்கள் மகன்களைத் தங்கள் கைகளில் கொண்டுவருவார்கள்;மகள்களையும் தங்கள் தோள்களில் சுமந்து கொண்டுவருவார்கள். 23 அரசர்கள் உங்களுக்கு வளர்ப்புத் தந்தைகளாய் இருப்பார்கள்;அரசிகள் உங்களுக்கு வளர்ப்புத் தாய்களாய் இருப்பார்கள்.அவர்கள் உங்களுக்கு முன்பாகத் தரையில் முகங்குப்புற விழுந்து வணங்குவார்கள்;அவர்கள் உங்கள் பாதங்களிலுள்ள புழுதியை நக்குவார்கள்.அப்பொழுது நீங்கள், நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வீர்கள்;என்னை நம்பியிருப்பவர்கள் வெட்கப்பட்டு போகமாட்டார்கள்” என்கிறார். 24 போர்வீரர்களிடமிருந்து கொள்ளைப்பொருட்களைப் பறித்தெடுக்க முடியுமோ?வெற்றி வீரனிடமிருந்து கைதிகளைக் காப்பாற்ற முடியுமோ? 25 ஆனால், யெகோவா சொல்வது இதுவே:“ஆம், கைதிகள் போர்வீரரிடமிருந்து விடுவிக்கப்படுவார்கள்;வலியவனிடமிருந்து கொள்ளைப்பொருளும் மீட்கப்படும்.உங்களுடன் சண்டையிடுகிறவர்களோடு நான் சண்டையிடுவேன்.உங்கள் பிள்ளைகளை நான் காப்பாற்றுவேன். 26 உங்களை ஒடுக்குகிறவர்களைத் தங்கள் சொந்த மாமிசத்தையே தின்னச் செய்வேன்;திராட்சை மதுவினால் வெறிகொள்வதுபோல்,அவர்கள் தங்கள் சொந்த இரத்தத்தினாலேயே வெறிகொள்வார்கள்.அப்பொழுது யெகோவாவாகிய நானே உங்கள் இரட்சகர்;யாக்கோபின் வல்லவராகிய நானே உங்கள் மீட்பர் என்பதைமனுக்குலம் அனைத்தும் அறிந்துகொள்ளும்.”