Matthew 6 (BOITCV)
1 “நீங்கள் உங்கள் நற்செயல்களை மனிதர் முன்பாக அவர்கள் காணவேண்டுமென்று செய்யாதபடி கவனமாய் இருங்கள். நீங்கள் அப்படிச் செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவிடமிருந்து உங்களுக்கு வெகுமதி கிடைக்காது. 2 “ஆகவே நீங்கள் ஏழைகளுக்கு கொடுக்கும்போது, தம்பட்டம் அடித்து அறிவிக்க வேண்டாம். மனிதர்களால் மதிப்பைப் பெறும்படி, வேஷக்காரர்கள் ஜெப ஆலயங்களிலும், வீதிகளிலும் செய்வதுபோல் செய்யவேண்டாம். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அவர்கள் தங்கள் வெகுமதியை முழுமையாய் பெற்றுவிட்டார்கள். 3 ஆனால் நீங்கள் ஏழைகளுக்குக் கொடுக்கும்போது, உங்கள் வலதுகை செய்வதை உங்கள் இடதுகை அறியாதிருக்கட்டும். 4 அப்பொழுது நீங்கள் கொடுப்பது இரகசியமாய் இருக்கும். நீங்கள் இரகசியமாய் செய்வதைக் காண்கிற உங்கள் பிதா, உங்களுக்கு வெகுமதி அளிப்பார். 5 “நீங்கள் மன்றாடும்போது, வேஷக்காரர்களைப்போல் இருக்கவேண்டாம், ஏனெனில் அவர்கள் மனிதர் காணும்படி ஜெப ஆலயங்களிலும், வீதிகளின் சந்திகளிலும் நின்று மன்றாடுவதை விரும்புகிறார்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அவர்கள் தங்கள் வெகுமதியை ஏற்கெனவே முழுமையாய்ப் பெற்றுவிட்டார்கள். 6 ஆனால் நீங்கள் மன்றாடும்போது, உங்கள் அறைக்குள் போய், கதவை மூடி கண்களுக்குக் காணப்படாதிருக்கிற உங்கள் பிதாவிடம் மன்றாடுங்கள். அப்பொழுது மறைவில் செய்யப்படுவதைக் காணும் உங்கள் பிதா, உங்களுக்கு வெகுமதியளிப்பார். 7 நீங்கள் மன்றாடும்போது, இறைவனை அறியாதவர்களைப்போல் வீண் வார்த்தைகளைப் பேசாதிருங்கள், ஏனெனில் தங்களின் அதிக வார்த்தைகளின் நிமித்தம், தங்கள் மன்றாட்டு கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள். 8 நீங்கள் அவர்களைப் போலிருக்க வேண்டாம், ஏனெனில் நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் பிதா அறிந்திருக்கிறார். 9 “ஆகவே, நீங்கள் மன்றாட வேண்டிய விதம் இதுவே:“ ‘பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே,உமது பெயர் பரிசுத்தப்படுவதாக, 10 உம்முடைய இராஜ்யம் வருவதாக.உம்முடைய சித்தம் பரலோகத்திலே செய்யப்படுவதுபோல்பூமியிலேயும் செய்யப்படுவதாக. 11 எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். 12 எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோலஎங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். 13 எங்களைச் சோதனைக்கு உட்படப்பண்ணாமல்,எங்களைத் தீமையிலிருந்து இரட்சித்துக்கொள்ளும்.இராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென்.’ 14 ஏனெனில், மனிதர் உங்களுக்கெதிராகக் குற்றம் செய்யும்போது நீங்கள் அவர்களை மன்னித்தால், உங்கள் பரலோகப் பிதாவும் உங்களை மன்னிப்பார். 15 ஆனால் மனிதருடைய குற்றங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாவிட்டால், உங்கள் பிதாவும் உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிக்கமாட்டார். 16 “நீங்கள் உபவாசிக்கும்போது, வேஷக்காரர் செய்வதுபோல் வாடிய முகத்துடன் காணப்பட வேண்டாம். ஏனெனில் அவர்கள் தாங்கள் உபவாசிப்பதை மனிதர்கள் பார்க்கவேண்டுமென்று அவர்கள் தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அவர்கள் தங்கள் வெகுமதியை ஏற்கெனவே முழுமையாகப் பெற்றுவிட்டார்கள் என்று நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 17 ஆனால் நீங்கள் உபவாசிக்கும்போது, உங்கள் தலைக்கு எண்ணெய் வைத்து, உங்கள் முகத்தைக் கழுவுங்கள். 18 அப்பொழுது நீங்கள் உபவாசிப்பது மனிதருக்கு வெளிப்படையாகத் தெரியாதிருக்கும். ஆனால் கண்களுக்குக் காணப்படாதிருக்கிற உங்கள் பிதாவுக்கு மட்டும் தெரிந்திருக்கும்; மறைவில் செய்பவற்றை காண்கிற உங்கள் பிதா, உங்களுக்கு வெகுமதி அளிப்பார். 19 “நீங்கள் பூமியில் உங்களுக்காகச் செல்வங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம். இங்கே அவை பூச்சி அரித்தும், துருப்பிடித்தும் அழிந்துவிடும். திருடரும் உடைத்துத் திருடுவார்கள். 20 ஆனால் உங்களுடையச் செல்வத்தைப் பரலோகத்திலே சேர்த்துவையுங்கள். அங்கே அவை பூச்சி அரித்தோ, துருப்பிடித்தோ அழிவதில்லை. அங்கே திருடரும் உடைத்துத் திருடமாட்டார்கள். 21 ஏனெனில் உங்கள் செல்வம் எங்கே இருக்கிறதோ, அங்குதான் உங்கள் இருதயமும் இருக்கும். 22 “கண் உடலின் விளக்காய் இருக்கிறது. உனது கண் நல்லதாய் இருந்தால், உன் முழு உடலும் வெளிச்சத்தால் நிரம்பியிருக்கும். 23 ஆனால் உன் கண் கெட்டதாயிருந்தால், உன் முழு உடலும் இருளால் நிறைந்திருக்கும். அப்படியானால், உன்னில் இருக்கும் வெளிச்சமே இருளாயிருந்தால், அந்த இருள் எவ்வளவு பெரியதாயிருக்கும்! 24 “எந்த வேலைக்காரனும், இரண்டு எஜமான்களுக்கு பணிசெய்ய முடியாது. அவன் ஒருவனை வெறுத்து, இன்னொருவனில் அன்பு செலுத்துவான். அல்லது அவன் ஒருவனுக்கு உண்மையுள்ளவனாய் இருந்து, மற்றவனை அலட்சியம் செய்வான். அப்படியே நீங்கள் இறைவனுக்கும், பணத்துக்கும் பணிசெய்ய முடியாது. 25 “ஆதலால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், எதை உண்ணுவோம் எதைக் குடிப்போம் என உங்கள் உயிரைக்குறித்துக் கவலைப்பட வேண்டாம்; அல்லது எதை உடுத்துவோம் என உங்கள் உடலைக்குறித்தும் கவலைப்பட வேண்டாம். உங்கள் உயிர் உணவைவிடவும், உங்கள் உடல் உடையைவிடவும் முக்கியமானதல்லவா? 26 ஆகாயத்துப் பறவைகளைப் பாருங்கள்; அவை விதைப்பதோ, அறுவடை செய்வதோ, களஞ்சியங்களில் சேர்த்து வைப்பதோ இல்லை. அப்படி இருந்தும் உங்கள் பரலோக பிதா அவைகளுக்கும் உணவளிக்கிறார். நீங்கள் அவற்றைவிட அதிக மதிப்பு வாய்ந்தவர்கள் அல்லவா? 27 கவலைப்படுவதால், உங்களில் யார் தன் வாழ்நாளில் ஒருமணி நேரத்தைக் கூட்டமுடியும்? 28 “உடையைக் குறித்தும் நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டு மலர்கள் எப்படி வளர்கின்றன என்று பாருங்கள். அவை உழைப்பதுமில்லை, நூல் நூற்கிறதுமில்லை. 29 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், சாலொமோன் எல்லாச் சிறப்புடையவனாய் இருந்துங்கூட, இவைகளில் ஒன்றைப்போல் உடை உடுத்தியதில்லை. 30 விசுவாசக் குறைவுள்ளவர்களே! இன்றைக்கு இருந்து நாளைக்கு நெருப்பிலே எறியப்படுகிற காட்டுப் புல்லுக்கே, இறைவன் இவ்வாறு உடுத்துவாரானால், உங்கள் பிதா உங்களுக்கு, எவ்வளவு அதிகமாய் உடுத்துவிப்பார்? 31 எனவே என்னத்தை உண்போம்? என்னத்தைக் குடிப்போம்? என்னத்தை உடுப்போம்? என்று சொல்லிக் கவலைப்பட வேண்டாம். 32 ஏனெனில் இறைவனை அறியாதவர்கள் இவற்றின் பின்னால் ஓடுகிறார்கள். உங்கள் பரலோக பிதாவோ இவை உங்களுக்குத் தேவை என அறிந்திருக்கிறார். 33 எனவே முதலாவதாக இறைவனுடைய அரசையும் அவரது நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு அவற்றோடுகூடக் கொடுக்கப்படும். 34 நாளைக்கு என்ன நடக்கும் என்று கவலைப்பட வேண்டாம். ஏனெனில் நாளையத்தினம், நாளைக்கான தேவையைப் பார்த்துக்கொள்ளும். ஒவ்வொரு நாளுக்கும், அன்றன்றுள்ள பிரச்சனையே போதும்.