1 Chronicles 29 (IRVT)
1 பின்பு தாவீது ராஜா சபையார்கள் எல்லோரையும் நோக்கி: தேவன் தெரிந்துகொண்ட என்னுடைய மகனாகிய சாலொமோன் இன்னும் வாலிபனும் இளைஞனுமாகவும் இருக்கிறான்; செய்யவேண்டிய வேலையோ பெரியது; அது ஒரு மனிதனுக்கு அல்ல, தேவனாகிய யெகோவாவுக்குக் கட்டும் அரண்மனை. 2 நான் என்னாலே முடிந்தவரை என்னுடைய தேவனுடைய ஆலயத்திற்கென்று பொன் வேலைக்குப் பொன்னையும், வெள்ளி வேலைக்கு வெள்ளியையும், வெண்கல வேலைக்கு வெண்கலத்தையும், இரும்பு வேலைக்கு இரும்பையும், மரவேலைக்கு மரத்தையும், பதிக்கப்படத்தக்க கோமேதகக் கற்களையும், பலவர்ணக் கற்களையும், விலையேறப்பெற்ற சகலவித ரத்தினங்களையும், பளிங்கு கற்கள் முதலிய கற்களையும் ஏராளமாகச் சேமித்தேன். 3 இன்னும் என்னுடைய தேவனுடைய ஆலயத்தின்மேல் நான் வைத்திருக்கிற வாஞ்சையால், பரிசுத்த ஆலயத்துக்காக நான் சேமித்த அனைத்தையும்தவிர, எனக்குச் சொந்தமான பொன்னையும் வெள்ளியையும் என்னுடைய தேவனுடைய ஆலயத்துக்கென்று கொடுக்கிறேன். 4 அறைகளின் சுவர்களை மூடுவதற்காகவும். பொன்வேலைக்குப் பொன்னும், வெள்ளிவேலைக்கு வெள்ளியும் உண்டாக்கவும், கைவினைக் கலைஞர்கள் செய்யும் வேலை அனைத்திற்காகவும், ஓப்பீரின் தங்கமாகிய மூவாயிரம் தாலந்து தங்கத்தையும், சுத்த வெள்ளியாகிய ஏழாயிரம் தாலந்து வெள்ளியையும் கொடுக்கிறேன். 5 இப்போதும் உங்களில் இன்றையதினம் யெகோவாவுக்குத் தன்னுடைய கைக்காணிக்கைகளைச் செலுத்த மனபூர்வமானவர்கள் யார் என்றான். 6 அப்பொழுது வம்சங்களின் பிரபுக்களும், இஸ்ரவேல் கோத்திரங்களின் பிரபுக்களும், ஆயிரம்பேர்களுக்குத் தலைவர்களும், நூறுபேர்களுக்குத் தலைவர்களும், ராஜாவின் வேலைக்காரர்களாகிய பிரபுக்களும் மனப்பூர்வமாக, 7 தேவனுடைய ஆலயத்து வேலைக்கு ஐயாயிரம் தாலந்து பொன்னையும், பத்தாயிரம் தங்கக்காசையும், பத்தாயிரம் தாலந்து வெள்ளியையும், பதிணெட்டாயிரம் தாலந்து வெண்கலத்தையும், லட்சம் தாலந்து இரும்பையும் கொடுத்தார்கள். 8 யார் கையில் ரத்தினங்கள் இருந்ததோ, அவர்கள் அவைகளையும் யெகோவாவுடைய ஆலயத்துப் பொக்கிஷத்திற்கென்று கெர்சோனியனான யெகியேலின் கையிலே கொடுத்தார்கள். 9 இப்படி மனப்பூர்வமாகக் கொடுத்ததற்காக மக்கள் சந்தோஷப்பட்டார்கள்; உத்தம இருதயத்தோடு உற்சாகமாகக் யெகோவாவுக்குக் கொடுத்தார்கள்; தாவீது ராஜாவும் மிகவும் சந்தோஷப்பட்டான். 10 ஆகையால் தாவீது சபை அனைத்தின் கண்களுக்கு முன்பாகவும் யெகோவாவுக்கு ஸ்தோத்திரம் செலுத்திச் சொன்னது: எங்கள் முற்பிதாவாகிய இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே, எல்லாக் காலங்களிலும் தேவரீருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. 11 யெகோவாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகள் எல்லாம் உம்முடையவைகள்; யெகோவாவே, ராஜ்ஜியமும் உம்முடையது; தேவரீர், எல்லோருக்கும் தலைவராக உயர்ந்திருக்கிறீர். 12 ஐசுவரியமும் புகழும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சக்தியும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும். 13 இப்போதும் எங்களுடைய தேவனே, நாங்கள் உமக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, உமது மகிமையுள்ள நாமத்தைத் துதிக்கிறோம். 14 இப்படி மனப்பூர்வமாகக் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் யார்? என்னுடைய மக்கள் யார்? எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம். 15 உமக்கு முன்பாக நாங்கள் எங்களுடைய முன்னோர்கள் எல்லோரைப்போலவும் அந்நியர்களாகவும் வழிப்போக்கர்களாகவும் இருக்கிறோம்; பூமியின்மேல் எங்கள் நாட்கள் ஒரு நிழலைப்போல இருக்கிறது; நிலைத்திருப்போம் என்னும் நம்பிக்கையில்லை. 16 எங்களுடைய தேவனாகிய யெகோவாவே, உம்முடைய பரிசுத்த நாமத்திற்கென்று உமக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்கு, நாங்கள் சேமித்திருக்கிற இந்தப் பொருட்களெல்லாம் உமது கரத்திலிருந்து வந்தது; எல்லாம் உம்முடையது. 17 என்னுடைய தேவனே, நீர் இருதயத்தைச் சோதித்து, உத்தம குணத்தில் பிரியமாயிருக்கிறீர் என்பதை அறிவேன்; இவையெல்லாம் நான் உத்தம இருதயத்தோடு மனப்பூர்வமாகக் கொடுத்தேன்; இப்பொழுது இங்கேயிருக்கிற உம்முடைய மக்களும் உமக்கு மனப்பூர்வமாகக் கொடுப்பதைக் கண்டு சந்தோஷமடைந்தேன். 18 ஆபிரகாம் ஈசாக்கு இஸ்ரவேல் என்னும் எங்கள் முன்னோர்களின் தேவனாகிய யெகோவாவே, உமது மக்களின் இருதயத்தில் உண்டான இந்த சிந்தையையும் நினைவையும் என்றைக்கும் காத்து, அவர்கள் இருதயத்தை உமக்கு நேராக்கியருளும். 19 என்னுடைய மகனாகிய சாலொமோன் உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய சாட்சிகளையும், உம்முடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்படிக்கும், இவைகள் எல்லாவற்றையும் செய்து, நான் ஆயத்தம்செய்த இந்த அரண்மனையைக் கட்டும்படிக்கும், அவனுக்கு உத்தம இருதயத்தைத் தந்தருளும் என்றான். 20 அதின்பின்பு தாவீது சபையார் அனைத்தையும் நோக்கி: இப்போது உங்களுடைய தேவனாகிய யெகோவாவை ஸ்தோத்தரியுங்கள் என்றான்; அப்பொழுது சபையார்கள் எல்லோரும் தங்கள் முன்னோர்களின் தேவனாகிய யெகோவாவை ஸ்தோத்தரித்து, தலை குனிந்து யெகோவாவையும் ராஜாவையும் பணிந்துகொண்டு. 21 யெகோவாவுக்குப் பலியிட்டு, மறுநாளிலே சர்வாங்க தகனபலிகளாக ஆயிரம் காளைகளையும், ஆயிரம் ஆட்டுக்கடாக்களையும், ஆயிரம் ஆட்டுக்குட்டிகளையும், அவைகளுக்குரிய பானபலிகளையும் இஸ்ரவேல் அனைத்திற்காகவும் யெகோவாவுக்குச் செலுத்தினார்கள். 22 அவர்கள் அன்றையதினம் மிகுந்த சந்தோஷத்தோடு யெகோவாவுக்கு முன்பாக சாப்பிட்டு குடித்து, தாவீதின் மகனாகிய சாலொமோனை இரண்டாம் முறை ராஜாவாக்கி, யெகோவாவுக்கு முன்பாக அவனை அதிபதியாகவும், சாதோக்கை ஆசாரியனாகவும் அபிஷேகம்செய்தார்கள். 23 அப்படியே சாலொமோன் தன்னுடைய தகப்பனாகிய தாவீதின் இடத்திலே யெகோவாவுடைய சிங்காசனத்தில் ராஜாவாக அமர்ந்திருந்து பாக்கியசாலியாக இருந்தான்; இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்கள். 24 எல்லா பிரபுக்களும் பெலசாலிகளும் தாவீது ராஜாவினுடைய எல்லா மகன்களோடும் ராஜாவாகிய சாலொமோனுக்கு அடங்கியிருந்தார்கள். 25 இஸ்ரவேலர்கள் எல்லோரும் காணக் யெகோவா சாலொமோனை மிகவும் பெரியவனாக்கி, முன்பே இஸ்ரவேலில் ராஜாவான ஒருவனுக்கும் இல்லாமலிருந்த ராஜரிக மகத்துவத்தை அவனுக்குக் கட்டளையிட்டார். 26 இவ்விதமாக ஈசாயின் மகனாகிய தாவீது இஸ்ரவேல் அனைத்திற்கும் ராஜாவாக இருந்தான். 27 அவன் இஸ்ரவேலை அரசாண்ட நாட்கள் நாற்பது வருடங்கள்; எப்ரோனிலே ஏழு வருடங்களும், எருசலேமிலே முப்பத்துமூன்று வருடங்களும் ராஜாவாக இருந்தான். 28 அவன் தீர்க்காயுசும் ஐசுவரியமும் மகிமையுமுள்ளவனாக, நல்ல முதிர்வயதிலே மரணமடைந்தபின்பு, அவனுடைய மகனாகிய சாலொமோன் அவனுடைய இடத்திலே ஆட்சிசெய்தான். 29 தாவீது ராஜாவினுடைய ஆரம்பம்முதல் கடைசிவரை செய்த எல்லா செயல்களும், அவன் அரசாண்ட விபரமும், அவனுடைய வல்லமையும், அவனுக்கும் இஸ்ரவேலுக்கும், அந்தந்த தேசங்களின் ராஜ்ஜியங்கள் அனைத்திற்கும் நடந்த காலசம்பவங்களும், 30 தீர்க்கதரிசியாகிய சாமுவேலின் வரலாற்று புத்தகத்திலும், தீர்க்கதரிசியாகிய நாத்தானின் வரலாற்று புத்தகத்திலும், தீர்க்கதரிசியாகிய காத்தின் வரலாற்று புத்தகத்திலும் எழுதியிருக்கிறது.
In Other Versions
1 Chronicles 29 in the ANTPNG2D
1 Chronicles 29 in the BNTABOOT
1 Chronicles 29 in the BOATCB2
1 Chronicles 29 in the BOGWICC
1 Chronicles 29 in the BOHNTLTAL
1 Chronicles 29 in the BOILNTAP
1 Chronicles 29 in the BOKHWOG
1 Chronicles 29 in the KBT1ETNIK
1 Chronicles 29 in the TBIAOTANT