Deuteronomy 29 (BOITCV)
1 ஓரேப் மலையிலே செய்யப்பட்ட உடன்படிக்கையுடன் மோவாபிலே இஸ்ரயேலருடன் செய்துகொள்ளும்படி யெகோவா மோசேக்குக் கட்டளையிட்ட உடன்படிக்கையின் நிபந்தனைகள் இவையே. 2 மோசே எல்லா இஸ்ரயேலரையும் அழைப்பித்து, அவர்களுக்குச் சொன்னதாவது: யெகோவா எகிப்திலே பார்வோனுக்கும், அவனுடைய அதிகாரிகளுக்கும், அவனுடைய நாடு முழுவதுக்கும் செய்ததை உங்கள் கண்கள் கண்டன. 3 அந்த பெரிய சோதனைகளையும், அற்புதமான பெரிய அடையாளங்களையும், அதிசயங்களையும் உங்கள் கண்களினாலேயே நீங்கள் கண்டீர்கள். 4 ஆனால் இன்றுவரை விளங்கிக்கொள்ளும் மனதையோ, காணும் கண்களையோ, கேட்கும் காதுகளையோ யெகோவா உங்களுக்கு கொடுக்கவில்லை. 5 நான் உங்களை நாற்பது வருடகாலமாக பாலைவனத்தின் வழியாக வழிநடத்தி வந்தேன். அக்காலத்தில் உங்கள் உடைகள் பழையதாகிக் கிழியவுமில்லை, உங்கள் கால்களில் இருந்த செருப்புகள் தேயவுமில்லை. 6 நீங்கள் அப்பம் சாப்பிடவுமில்லை, திராட்சை இரசமோ, மதுபானமோ குடிக்கவுமில்லை. அவரே உங்கள் இறைவனாகிய யெகோவா என்பதை நீங்கள் அறியும்படியே யெகோவா இவற்றைச் செய்தார். 7 நீங்கள் இங்கு வந்து சேர்ந்தபோது, எஸ்போனின் அரசன் சீகோனும், பாசானின் அரசன் ஓகுவும் நம்மை எதிர்த்து யுத்தம் செய்ய வந்தார்கள். அவர்களைத் தோற்கடித்தோம். 8 நாம் அவர்களுடைய நாட்டைக் கைப்பற்றி, ரூபனியருக்கும், காத்தியருக்கும், மனாசே கோத்திரத்தின் பாதி பேருக்கும் உரிமைச்சொத்தாக அதைக் கொடுத்தோம். 9 ஆகவே இந்த உடன்படிக்கையின் நிபந்தனைகளைக் கவனமாய்க் கைக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் உங்கள் முயற்சிகளிலெல்லாம் செழித்து வாழ்வீர்கள். 10 உங்கள் தலைவர்கள், முக்கிய மனிதர்கள், உங்கள் சபைத்தலைவர்கள், அதிகாரிகள், இஸ்ரயேலின் மற்ற எல்லா மனிதர்கள் ஆகிய நீங்கள் எல்லோரும் இன்று இறைவனாகிய யெகோவாவுக்குமுன் நிற்கிறீர்கள். 11 உங்களுடன் உங்கள் பிள்ளைகளும், மனைவிகளும், அந்நியரும் இருக்கிறார்கள். இந்த அந்நியர் உங்கள் முகாம்களில் உங்களுக்கு விறகுவெட்டி, தண்ணீர் அள்ளிப் பணிசெய்கிறவர்கள். 12 நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுடன், ஒரு உடன்படிக்கையைச் செய்வதற்காகவே இன்று இங்கு நிற்கிறீர்கள். இன்று யெகோவா இந்த உடன்படிக்கையைச் செய்து, ஒரு ஆணையினால் அதை முத்திரையிடுகிறார். 13 அவர் உங்களுக்கு வாக்குப்பண்ணியபடியும், உங்கள் முற்பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு ஆணையிட்டபடியும் இன்று நீங்கள் அவருடைய மக்களாயும், அவர் உங்கள் இறைவனாயும் இருப்பதை உறுதிப்படுத்தும்படி அவர் இதைச் செய்கிறார். 14 நான் இந்த ஆணையுடனான இந்த உடன்படிக்கையை உங்களோடு மட்டும் செய்யவில்லை. 15 இன்று இங்கே நம்முடைய இறைவனாகிய யெகோவாவின் முன்னிலையில் நிற்கிற உங்களோடு மட்டுமல்ல, இனிவரப்போகும் சந்ததியினரான இஸ்ரயேலருடனும் இதைச் செய்கிறேன். 16 நாம் எகிப்திலே எப்படி வாழ்ந்தோமென்றும், நமது வழியில் நாடுகளை எப்படிக் கடந்துவந்தோம் என்றும் நீங்கள் அறிவீர்கள். 17 அவர்களின் மத்தியில் மரத்தாலும், கல்லாலும், வெள்ளியாலும் தங்கத்தினாலும் செய்யப்பட்ட அவர்களுடைய அருவருப்பான உருவச்சிலைகளையும், விக்கிரகங்களையும் அவர்கள் வைத்திருக்கக் கண்டீர்கள். 18 உங்களுக்குள் ஒரு ஆணோ, பெண்ணோ, வம்சமோ, கோத்திரமோ உங்கள் இறைவனாகிய யெகோவாவை வழிபடுவதை விட்டு விலகி, அந்த நாடுகளுடைய தெய்வங்களை வழிபடப் போகாமலிருக்கும்படி கவனமாயிருங்கள். அப்படிப்பட்ட கசப்பான விஷத்தை உருவாக்கும் வேர், உங்களுக்குள் இராதபடியும் கவனமாயிருங்கள். 19 ஆணையின் வார்த்தைகளைக் கேட்கும் மனிதன், தன்மேல் ஆசீர்வாதம் வரும்படி மன்றாடுகிறான். ஆகையால் அவன், “நான் என் சொந்த வழியிலே தொடர்ந்து நடந்தாலும், நான் பாதுகாப்பாகவே இருப்பேன்” என எண்ணக்கூடாது. அப்படி அவன் நடந்தால் அது செழிப்பான நாட்டின்மேலும், வறண்ட நாட்டின்மேலும் பேரழிவையே கொண்டுவரும். 20 யெகோவா அவனை ஒருபோதும் மன்னிக்க மனதுடையவராய் இருக்கமாட்டார். அவருடைய கோபமும், வைராக்கியமும் அந்த மனிதனுக்கு விரோதமாய்ப் பற்றியெரியும். இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள சாபங்களெல்லாம் அவன்மேல் வரும். யெகோவா அவனுடைய பெயரை வானத்தின்கீழ் இராமல் அற்றுப்போகப்பண்ணுவார். 21 இந்த சட்டப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள உடன்படிக்கையின் எல்லா சாபங்களின்படியும், அவனுக்கு அழிவு உண்டாகும்படிக்கு யெகோவா அவனை இஸ்ரயேலின் கோத்திரங்கள் அனைத்திலிருந்தும் தனிமைப்படுத்துவார். 22 அப்பொழுது உங்களுக்குப்பின் வரப்போகிற உங்கள் சந்ததிகளான உங்களுடைய பிள்ளைகளும், தூரதேசத்திலிருந்து வரும் அந்நியர்களும், உங்கள் நாட்டுக்கு ஏற்பட்ட பேரழிவுகளையும், யெகோவா அதன்மேல் கொண்டுவந்த நோய்களையும் காண்பார்கள். 23 நாடு முழுவதும் வெடியுப்புக்களாலும், கந்தகத்தாலும் எரிந்துபோயிருக்கும். அங்கு ஒன்றும் பயிரிடப்படுவதில்லை. ஒன்றும் முளைப்பதுமில்லை. தாவரம் ஒன்றும் வளரவும்மாட்டாது. இந்த நாட்டின் அழிவு யெகோவா தமது கடுங்கோபத்தில் பாழாக்கிப்போட்ட சோதோம், கொமோரா, அத்மா, செபோயீம் பட்டணங்களின் அழிவைப்போல் இருக்கும். 24 அப்பொழுது எல்லா நாடுகளும், “யெகோவா ஏன் இந்த நாட்டுக்கு இதைச் செய்தார்? அவருடைய பற்றியெரியும் இந்த கோபம் எதற்காக?” என்று கேட்பார்கள். 25 அதற்குரிய பதிலோ: “இம்மக்கள் தங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவின், உடன்படிக்கையைக் கைவிட்டு விட்டார்கள். அவர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தபோது அவர் அவர்களுடன் செய்த உடன்படிக்கையை கைவிட்டு விட்டார்கள். அவர்கள் வழிவிலகி வேறு தெய்வங்களை வழிபட்டார்கள். 26 தாங்கள் அறியாததும், அவர் அவர்களுக்குக் கொடுத்திராததுமான தெய்வங்களை வணங்கினார்கள். 27 ஆகவே, யெகோவாவினுடைய கோபம் இந்த நாட்டுக்கு விரோதமாகப் பற்றி எரிந்தது. அதினாலே இப்புத்தகத்தில் எழுதியிருக்கும் சாபங்களை எல்லாம் அவர் அந்நாட்டின்மேல் வரப்பண்ணினார். 28 எனவே இன்றிருக்கின்றபடி, யெகோவா தம்முடைய மிகுந்த கோபத்தினாலும், கண்டிப்பினாலும் அவர்களை அந்நாட்டிலிருந்து வேருடன் பிடுங்கி, இன்னொரு நாட்டுக்குள் தள்ளிவிட்டார்” என்பதாக இருக்கும். 29 மறைபொருளான காரியங்கள் நம் இறைவனாகிய யெகோவாவுக்கே உரியவை, ஆனால் அவரால் வெளிப்படுத்தப்பட்டவைகளே, நமக்கும் நமது பிள்ளைகளுக்கும் என்றைக்கும் உரியவைகள். சட்டத்தின் எல்லா வார்த்தைகளையும் நாம் கைக்கொள்வதற்காகவே இது வெளிப்படுத்தப்பட்டது.
In Other Versions
Deuteronomy 29 in the ANTPNG2D
Deuteronomy 29 in the BNTABOOT
Deuteronomy 29 in the BOHNTLTAL
Deuteronomy 29 in the BOILNTAP
Deuteronomy 29 in the KBT1ETNIK
Deuteronomy 29 in the TBIAOTANT