Ezekiel 30 (BOITCV)
1 யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: 2 “மனுபுத்திரனே, நீ இறைவாக்கு உரைத்துச் சொல்லவேண்டியதாவது: ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே:“ ‘ஆபத்தான அந்த நாள் வருகிறது“என அலறிச் சொல்லுங்கள்!” 3 அந்த நாள், சமீபமாயுள்ளது.யெகோவாவின் நாள் சமீபமாயுள்ளது.அது ஒரு இருள்சூழ்ந்த நாள்;பல நாடுகளுக்கும் அது அழிவின் காலம். 4 எகிப்திற்கு விரோதமாக வாள் ஒன்று வரும்,எத்தியோப்பியரின்மீது வேதனைகள் பெருகும்.எகிப்திலே கொல்லப்படுவோர் விழும்போதுஅதனுடைய செல்வம் எடுத்துக்கொண்டு போகப்படும்.அதனுடைய அஸ்திபாரங்களும் இடிக்கப்படும். 5 எத்தியோப்பியா, பூத், லீதியா, அரேபியா, லிபியா ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களும், உடன்படிக்கை நாட்டின் மக்களும் எகிப்தியரோடுகூட வாளினால் சாவார்கள். 6 “ ‘யெகோவா கூறுவது இதுவே,“ ‘எகிப்தின் நட்பு நாடுகளும் விழும்.அவளுடைய பெருமையான பெலன் குன்றிப்போகும்.அவர்கள், மிக்தோல் தொடக்கம்முதல் அஸ்வான்வரையும்வாளினால் அவர்களுக்குள் வெட்டுண்டு கிடப்பார்கள்என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். 7 அவர்கள், பாழடைந்த நாடுகளுக்குள்பாழாய்ப் போவார்கள்.அழிந்துபோன பட்டணங்களுக்குள்,அவர்களுடைய பட்டணங்களும் அழிக்கப்படும். 8 நான் எகிப்திற்கு நெருப்பு வைக்கும்போதும்,அதன் உதவியாளர்கள் நசுக்கப்படும்போதும்நானே யெகோவா என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள். 9 “ ‘அந்த நாளிலே பொய்யின்பம் கொண்டுள்ள எத்தியோப்பியரை அச்சுறுத்துவதற்காக என்னிடமிருந்து தூதுவர்கள் கப்பல்களில் போவார்கள். எகிப்து அழியும் நாளிலே, வேதனை அவர்களைப் பிடித்துக்கொள்ளும். நிச்சயமாகவே அந்த நாள் வருகிறது. 10 “ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே:“ ‘பாபிலோனிய அரசன் நேபுகாத்நேச்சாரின் கையினால்,எகிப்திய மக்கள்கூட்டத்திற்கு ஒரு முடிவைக் கொண்டுவருவேன். 11 நாடுகளுக்குள் மிகக் கொடியவனான அவனும்,அவன் இராணுவமும் நாட்டை அழிப்பதற்காகக் கொண்டுவரப்படுவார்கள்.அவர்கள், தங்கள் வாள்களை எகிப்திற்கு விரோதமாய் உருவி,கொலையுண்டவர்களால் நாட்டை நிரப்புவார்கள். 12 நான் நைல் நதியின் நீரோட்டங்களை வற்றச்செய்து,நாட்டைத் தீயோருக்கு விற்றுப்போடுவேன்.நாட்டையும் அதிலுள்ள அனைத்தையும்அந்நியரின் கையினால் பாழாக்கிவிடுவேன்.யெகோவாவாகிய நானே இதைச் சொன்னேன். 13 “ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே:“ ‘நான் விக்கிரகங்களை அழித்துமெம்பிஸில் உள்ள உருவச் சிலைகளுக்கு ஒரு முடிவை உண்டாக்குவேன்.எகிப்தில் இனியொருபோதும் இளவரசன் ஒருவன் எழும்புவதில்லை.நாடெங்கும் நான் பயத்தை ஏற்படுத்துவேன். 14 நான் எகிப்தின் பத்ரோஸைப் பாழாக்கி,சோவானுக்கு நெருப்புமூட்டி,தேபேஸைத் தண்டிப்பேன். 15 எகிப்தின் பலத்த கோட்டையான பெலுஷக்யத்தின்மேல்,என் கோபத்தை ஊற்றுவேன்.தேபேஸ் குடிகளை தண்டிப்பேன். 16 நான் எகிப்திற்கு நெருப்பு வைப்பேன்;பெலுஷக்யம் வேதனையால் துடிக்கும்;தேபேஸ் புயலினால் அழிந்துபோகும்!மெம்பிஸ் தொடர்ந்து துன்பத்திலேயே இருக்கும். 17 ஹெலியோபொலிஸ், பூபாஸ்டிஸ் நகரங்களின் வாலிபர்கள்வாளினால் சாவார்கள்.நகரங்களிலுள்ளவர்களும் சிறைப்பட்டுப் போவார்கள். 18 எகிப்தின் நுகங்களை நான் முறிக்கும் நாளிலே,தக்பானேஸில் பகல் இருளாகும்.அதனுடைய பெருமையான பெலனும் ஒரு முடிவுக்கு வரும்.அது மேகங்களால் மூடப்படும்.அதன் கிராமங்களிலுள்ளவர்கள் சிறைப்பட்டுப் போவார்கள். 19 இவ்வாறாக, நான் எகிப்தைத் தண்டிப்பேன்.அவர்களும் நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள்.’ ” 20 அரசன் யோயாக்கீன் சிறைப்பிடிக்கப்பட்ட பதினோராம் வருடம், முதலாம் மாதம், ஏழாம்நாளில், யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது. 21 “மனுபுத்திரனே, நான் எகிப்திய அரசன் பார்வோனின் புயத்தை முறித்துவிட்டேன். அது சுகமடையும்படி கட்டப்படவும் இல்லை. வாள் பிடிக்கத்தக்க பெலன் ஏற்படக்கூடியதாக பத்தை வைத்துக் கட்டப்படவுமில்லை. 22 ஆதலால், ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: நான் எகிப்தின் அரசன் பார்வோனுக்கு விரோதமாய் இருக்கிறேன். அவனுடைய முறிந்த புயத்தோடு நல்ல புயத்தையும் அதாவது, இரு கரங்களையுமே நான் முறித்து, அவனுடைய கையிலிருந்து வாளை விழப்பண்ணுவேன். 23 நான் எகிப்தியரைப் பல நாடுகளுக்குள்ளும் சிதறிப்போகச்செய்து, அவர்களை நாடுகளெங்கும் கலைந்து போகப்பண்ணுவேன். 24 நான் பாபிலோன் அரசனின் கரங்களை பலப்படுத்தி, எனது வாளை அவனுடைய கையிலே கொடுப்பேன். ஆனால் பார்வோனின் கரங்களையோ நான் முறிப்பேன். அவன் காயமுற்ற ஒரு மனிதனைப்போல பாபிலோன் அரசனுக்கு முன் வேதனையில் புலம்புவான். 25 பாபிலோன் அரசனின் கரங்களை நான் பலப்படுத்துவேன். ஆனால் பார்வோனின் புயங்களோ செயலிழந்துபோகும். நான் எனது வாளைப் பாபிலோன் அரசனின் கையில் கொடுப்பேன். அவன் அதை எகிப்திற்கு விரோதமாகச் சுழற்றுவான். அப்பொழுது அவர்கள் நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள். 26 நான் எகிப்தியரைப் பல நாடுகளுக்குள்ளும் சிதறடித்து, தேசங்களுக்குள்ளே அவர்களைக் கலைந்து போகப்பண்ணுவேன். அப்பொழுது நானே யெகோவா என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.”