2 Chronicles 13 (BOITCV)
1 யெரொபெயாம் இஸ்ரயேலில் ஆட்சி செய்த பதினெட்டாம் வருடம் அபியா யூதாவின் அரசனானான். 2 அவன் எருசலேமில் மூன்று வருடங்கள் ஆட்சிசெய்தான். அவனுடைய தாயின் பெயர் மிகாயாள்; அவள் கிபியாவைச் சேர்ந்த ஊரியேலின் மகள்.அபியாவுக்கும் யெரொபெயாமுக்கும் இடையில் யுத்தம் நடந்தது. 3 அபியா தேர்ந்தெடுக்கப்பட்ட 4,00,000 வலிமையான போர்வீரர்களுடன் போருக்குப் போனான்; அது போன்றே யெரொபெயாமும் தேர்ந்தெடுக்கப்பட்ட 8,00,000 வலிமையான போர்வீரர்களுடன் அவனுக்கு எதிராக அணிவகுத்து நின்றான். 4 அபியா எப்பிராயீம் மலைநாட்டிலுள்ள செமராயீம் குன்றுமேல் ஏறி நின்று சொன்னதாவது: “யெரொபெயாமே, இஸ்ரயேலரே, நீங்கள் எல்லோரும் நான் சொல்வதைக் கேளுங்கள். 5 இஸ்ரயேலின் அரச பதவியை இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா தாவீதுக்கும், அவன் சந்ததிகளுக்கும் நிரந்தர உடன்படிக்கையினால் என்றென்றைக்குமாக கொடுத்திருப்பது உங்களுக்குத் தெரியாதா? 6 ஆனாலும் தாவீதின் மகனான சாலொமோனின் அதிகாரியான நேபாத்தின் மகன் யெரொபெயாம், தனது தலைவனுக்கு எதிராகக் கலகம் செய்திருக்கிறான். 7 ஒன்றுக்கும் உதவாத சில வீணர்கள் யெரொபெயாமுடன் ஒன்றுசேர்ந்து, சாலொமோனின் மகன் ரெகொபெயாமை எதிர்த்தார்கள்; அப்பொழுது ரெகொபெயாம் மனவலிமையற்ற வாலிபனும் எதிர்ப்பதற்கு பெலனற்றவனுமாயிருந்தான். 8 “இப்பொழுது நீங்கள் தாவீதின் சந்ததிகளின் கைகளில் யெகோவா கொடுத்த அரசாட்சியை எதிர்த்து நிற்கத் திட்டமிட்டுள்ளீர்கள். நீங்கள் உண்மையிலேயே பெருங்கூட்டமாய் இருக்கிறீர்கள்; யெரொபெயாம் உங்களுக்குத் தெய்வங்களாயிருக்கும்படி செய்த தங்கக் கன்றுக்குட்டிகளும் உங்களிடத்தில் உண்டு. 9 ஆனால் நீங்கள் ஆரோனின் மகன்களான யெகோவாவின் ஆசாரியர்களையும் லேவியர்களையும் துரத்திவிட்டு, மற்ற நாட்டு மக்கள் செய்ததுபோல் உங்களுக்குள்ளேயே நீங்கள் ஆசாரியர்களை ஏற்படுத்திக் கொள்ளவில்லையா? தன்னை அர்ப்பணிக்கும்படி ஒரு இளங்காளையையும், ஏழு ஆட்டுக்குட்டிகளையும் கொண்டுவருகிற எவனும் தெய்வங்கள் அல்லாதவற்றிற்கு ஆசாரியர்களாய் இருக்கமுடிந்ததே. 10 “எங்களுக்கோவெனில் யெகோவாவே எங்கள் இறைவன்; நாங்கள் அவரைவிட்டு விலகவில்லை. யெகோவாவுக்குப் பணிசெய்கிற ஆசாரியர்கள் ஆரோனின் மகன்களாயிருக்கிறார்கள்; லேவியர்கள் அவர்களுக்கு உதவிசெய்கிறார்கள். 11 ஒவ்வொரு காலையும் மாலையும் அவர்கள் யெகோவாவுக்கு தகன காணிக்கைகளையும், நறுமணத் தூபங்களையும் செலுத்துகிறார்கள். அவர்கள் ஒவ்வொரு மாலை வேளையிலும் தூய்மையான மேஜையில் அப்பங்களை அடுக்கிவைத்து, தங்கக் குத்துவிளக்குகளின் மேலுள்ள அகல் விளக்குகளையும் ஏற்றுவார்கள். நாங்கள் எங்கள் இறைவனாகிய யெகோவா செய்யும்படி சொன்னவற்றை நிறைவேற்றினோம். ஆனால் நீங்கள் அவரைவிட்டு விலகிவிட்டீர்கள். 12 இறைவன் எங்களோடிருக்கிறார்; அவரே எங்கள் தலைவராயிருக்கிறார். எக்காளங்களுடன் நிற்கும் அவருடைய ஆசாரியர்கள் உங்களுக்கெதிராக போர் முழக்கமிடுவார்கள். இஸ்ரயேல் மக்களே, உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவுக்கு விரோதமாக நீங்கள் போரிடாதீர்கள்; ஏனெனில் நீங்கள் வெற்றிபெறமாட்டீர்கள்” என்றான். 13 யெரொபெயாமோ படைகளை யூதாவைச் சுற்றிப் பின்பக்கமாய்ப் போகும்படி அனுப்பினான். இவ்விதமாக அவன் யூதாவுக்கு முன்னால் நின்றான். மறைந்திருந்து தாக்குவோர் அவர்களுக்கு பின்னால் இருந்தனர். 14 யூதா மக்கள் திரும்பிப் பார்த்துத் தாங்கள் முன்னும் பின்னும் தாக்கப்படுவதைக் கண்டார்கள். அப்பொழுது அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள். ஆசாரியர்கள் தங்கள் எக்காளங்களை ஊதினார்கள். 15 யூதாவின் மனிதர்கள் போர் முழக்கமிட்டார்கள். அவர்களுடைய போர் முழக்கத்தின்போது இறைவன் அபியாவுக்கும் யூதாவுக்கும் முன்பாக யெரொபெயாமையும் எல்லா இஸ்ரயேலரையும் முறியடித்தார். 16 இஸ்ரயேலர் யூதாவுக்கு முன்பாகத் தப்பி ஓடினார்கள். இறைவன் அவர்களை யூதாவின் கைகளில் ஒப்புக்கொடுத்தார். 17 அபியாவும் அவனுடைய மனிதர்களும் இஸ்ரயேலர்களில் பெருமளவில் வெட்டி வீழ்த்தினார்கள். எனவே அவர்களுள் தேர்ந்தெடுக்கப்பட்ட 5,00,000 வலிமைமிக்க போர்வீரர்கள் இறந்தார்கள். 18 இஸ்ரயேல் மனிதர் அந்த சந்தர்ப்பத்தில் யூதாவுக்குக் கீழ்ப்பட்டிருந்தார்கள். யூதாவின் மனிதர் தங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவிடம் நம்பிக்கையாயிருந்ததினால் வெற்றியடைந்தார்கள். 19 அபியா யெரொபெயாமைப் பின்தொடர்ந்து துரத்தி, அவனிடமிருந்து பெத்தேல், எஷானா, எப்ரோன் ஆகிய பட்டணங்களையும் அவற்றைச் சுற்றியுள்ள கிராமங்களையும் கைப்பற்றினான். 20 அபியாவின் நாட்களில் யெரொபெயாம் திரும்பவும் வலிமை அடையவில்லை. யெகோவா அவனை அடித்தார், அவன் இறந்துபோனான். 21 ஆனால் அபியா மேலும் வலிமையடைந்தான். அவன் பதினான்கு பெண்களைத் திருமணம் செய்தான். இருபத்து இரண்டு மகன்களும், பதினாறு மகள்களும் அவனுக்கு இருந்தார்கள். 22 அபியா செய்தவைகளும் சொன்னவைகளுமான அவனுடைய ஆட்சிக் காலத்தின் நிகழ்வுகள் எல்லாம் இறைவாக்கினனான இத்தோவின் விளக்கவுரையில் எழுதப்பட்டுள்ளன.
In Other Versions
2 Chronicles 13 in the ANTPNG2D
2 Chronicles 13 in the BNTABOOT
2 Chronicles 13 in the BOATCB2
2 Chronicles 13 in the BOGWICC
2 Chronicles 13 in the BOHNTLTAL
2 Chronicles 13 in the BOILNTAP
2 Chronicles 13 in the BOKHWOG
2 Chronicles 13 in the KBT1ETNIK
2 Chronicles 13 in the TBIAOTANT