Jeremiah 17 (BOITCV)
1 “யூதாவின் பாவம், இரும்பு எழுத்தாணியால் செதுக்கப்பட்டு,வைரத்தின் நுனியினால் பொறிக்கப்பட்டுள்ளது.அது அவர்களுடைய இருதயமாகிய கற்பலகையிலும்,அவர்களின் பலிபீடத்தின் கொம்புகளிலும் செதுக்கப்பட்டும் பொறிக்கப்பட்டும் உள்ளது. 2 அவர்களுடைய பிள்ளைகளுங்கூடபச்சையான மரங்களுக்கருகிலும் உயர்ந்த குன்றுகளின்மேலுள்ள மேடைகளையும்,அசேரா விக்கிரக தூண்களையும்நினைவில் வைத்திருக்கிறார்கள். 3 நாட்டிலுள்ள என் மலையையும்,உன் செல்வத்தையும், உன் பொக்கிஷங்கள் எல்லாவற்றையும்,அதோடுகூட உயர்ந்த உன் மேடைகளையும்கொள்ளைப்பொருளாக நான் கொடுப்பேன்.உன் நாடெங்குமுள்ள பாவத்தின் நிமித்தம் இப்படிச் செய்வேன். 4 நான் உனக்குத் தந்த உரிமைச்சொத்தைஉன் குற்றத்தினாலேயே நீ இழந்து விடுவாய்.நீ அறியாத நாட்டில் நான் உன்னைஉன் பகைவருக்கு அடிமையாக்குவேன்.ஏனெனில் நீ என் கோபத்தை மூட்டியிருக்கிறாய்.அது என்றைக்கும் எரிந்துகொண்டேயிருக்கும்.” 5 யெகோவா சொல்வது இதுவே:“மனிதரில் தன் நம்பிக்கையை வைத்து,தன் பெலனுக்காக மாம்சத்தைச் சார்ந்து,யெகோவாவைவிட்டு தனது இருதயத்தை விலக்கிக்கொள்கிறவன் சபிக்கப்பட்டவன். 6 அவன் பாழ்நிலத்திலுள்ள புதரைப்போல இருப்பான்.அவன் செழிப்பு வரும்போது, அதைக் காணமாட்டான்.அவன் யாரும் வசிக்க முடியாத உவர் நிலத்திலும்,பாலைவனத்திலுள்ள வறண்ட இடங்களிலும் தங்கியிருப்பான். 7 “ஆனால் யெகோவாவிடம் நம்பிக்கை வைத்து,அவரை உறுதியாய் நம்புகிற மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன். 8 அவன் தண்ணீரின் ஓரத்தில் நடப்பட்டுநீரூற்றருகில் தனது வேர்களை விடும் மரத்தைப்போல இருப்பான்.வெப்பம் வரும்போது அது பயப்படுவதில்லை.எப்போதும் அதன் இலைகள் பச்சையாயிருக்கும்.வறட்சியான வருடத்தில் அதற்குக் கவலை இல்லை.அது பழங்கொடுக்கத் தவறுவதில்லை.” 9 எல்லாவற்றிலும் பார்க்க இருதயமே வஞ்சனையுள்ளது.அதைக் குணமாக்கவே முடியாது.அதை உணர்ந்து கொள்ளக்கூடியவன் யார்? 10 “யெகோவாவாகிய நானே இருதயத்தை ஆராய்ந்து,மனதைச் சோதித்துப் பார்க்கிறவர்.மனிதனுக்கு அவனுடைய நடத்தைக்குத்தக்க வெகுமதி கொடுப்பதும்,அவனுடைய செயல்களுக்குத்தக்க பலனளிப்பதும் நானே.” 11 அநீதியான முறைகளால் தன் செல்வத்தைச் சேர்க்கிறவன்,தான் இடாத முட்டைகளை அடைகாக்கும் கவுதாரிக்கு ஒப்பாயிருக்கிறான்;அவனுடைய வாழ்வின் பாதி நாட்கள் போனபின்,அவனுடைய செல்வங்கள் அவனைவிட்டு நீங்கிப்போய்விடும்;முடிவிலோ அவன் தன்னை மூடன் என நிரூபிப்பான். 12 எங்களுடைய பரிசுத்த இடம் ஆதியிலிருந்தேஉயர்த்தப்பட்ட மகிமையுள்ள அரியணையாயிருக்கிறது. 13 யெகோவாவே, இஸ்ரயேலின் எதிர்ப்பார்ப்பே,உம்மைக் கைவிடும் யாவரும் வெட்கத்திற்குள்ளாவார்கள்.உம்மைவிட்டு விலகுகிற அவர்கள் யாவரும்வாழும் நீரூற்றாகிய யெகோவாவைக் கைவிட்டபடியால்,புழுதியில் அழிவார்கள். 14 யெகோவாவே, என்னைக் குணமாக்கும், நான் குணமாவேன்.என்னைக் காப்பாற்றும்,நான் காப்பாற்றப்படுவேன். ஏனெனில் நான் துதிக்கிறவர் நீரே. 15 இந்த மக்களோ என்னிடம்,“யெகோவாவின் வார்த்தை எங்கே?இப்போது அது நிறைவேறட்டும்” என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். 16 நானோ உம்மைப் பின்பற்றும் மேய்ப்பனாயிருப்பதை விட்டு ஓடிவிடவில்லை.ஏமாற்றத்தின் நாளை நான் விரும்பவில்லை என்பதை நீர் அறிவீர்.என் வாயின் வார்த்தைகள் உமக்குமுன் இருக்கின்றன. 17 நீர் எனக்கு ஒரு பயங்கரமாக இராதேயும்.பேராபத்து வரும்நாளில் நீரே என் அடைக்கலம். 18 என்னைத் துன்புறுத்துகிறவர்கள் வெட்கத்துக்கு உள்ளாகட்டும்,என்னையோ வெட்கப்பட விடாதிரும்.அவர்கள் பயப்படட்டும்,என்னையோ பயமின்றிக் காத்துக்கொள்ளும்.பேராபத்தின் நாளை அவர்கள்மேல் வரப்பண்ணும்.இரு மடங்கான அழிவினால் அவர்களை அழித்துவிடும். 19 யெகோவா என்னிடம் சொன்னது இதுவே: “யூதாவின் அரசர்கள் போய்வருகிறதான மக்கள் வாசலருகே போய் நில். எருசலேமின் மற்ற எல்லா வாசல்களிலும் போய் நில். 20 அங்கே நீ அவர்களிடம், ‘இந்த வாசல்களில் உட்செல்லும் யூதாவின் அரசர்களே! யூதாவின் மக்களே! எருசலேமில் குடியிருக்கிறவர்களே! நீங்கள் யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள் என்று சொல். 21 யெகோவா சொல்வது இதுவே; எருசலேமின் வாசல்களின் வழியே ஓய்வுநாளில் ஒரு சுமையாவது சுமந்து செல்லாதிருக்கவும் அல்லது உள்ளே கொண்டுவராமல் இருக்கவும் கவனமாயிருங்கள். 22 நீங்கள் ஓய்வுநாளில் உங்கள் வீடுகளிலிருந்து எந்தச் சுமையையும் கொண்டுவராமலும், எந்த ஒரு வேலையையும் செய்யாமலும் இருங்கள். அந்த நாளை நான் உங்கள் முற்பிதாக்களுக்குக் கட்டளையிட்டபடி, பரிசுத்த நாளாக கைக்கொள்ளுங்கள் என்றேன். 23 இருப்பினும் அவர்கள் அதைக் கேட்கவுமில்லை; கவனிக்கவுமில்லை. அவர்கள் பிடிவாதமுள்ளவர்களாய் என் புத்திமதியைக் கேட்காமலும், என் திருத்துதலை ஏற்றுக்கொள்ளாமலும் இருந்தார்கள். 24 ஆனால் யெகோவா அறிவிக்கிறதாவது, நீங்கள் எனக்குக் கீழ்ப்படியக் கவனமாயிருந்து, ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் கைக்கொள்ளுங்கள். அந்நாளில் இந்தப் பட்டணத்து வாசல்களுக்குள்ளே, ஒரு சுமையையும் கொண்டுவராமலும், ஒரு வேலையையும் செய்யாமலும் இருங்கள். 25 அப்பொழுது தாவீதின் அரியணையில் அமரும் அரசர்கள், அவர்களுடைய அதிகாரிகளுடன் இந்தப் பட்டணத்து வாசல்களுக்குள் வருவார்கள். அவர்களும், அவர்கள் அதிகாரிகளும் தேர்களிலும், குதிரைகளிலும் ஏறி வருவார்கள். அவர்களுடன் யூதா மனிதர்களும் எருசலேமில் வாழ்பவர்களும் வருவார்கள். இப்பட்டணமும் என்றைக்கும் குடிமக்களை உடையதாயிருக்கும். 26 யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமைச் சுற்றியுள்ள கிராமங்களிலுமிருந்து மக்கள் வருவார்கள். பென்யமீன் பிரதேசத்திலிருந்தும், மேற்கு மலையடிவாரங்களிலிருந்தும், மலைநாட்டிலும், யூதாவின் தெற்குப் பகுதிகளிலிருந்தும் வருவார்கள். அவர்கள் தகன காணிக்கைகளையும், பலிகளையும், தானிய காணிக்கைகளையும், தூபங்களையும், நன்றியறிதல் காணிக்கைகளையும் யெகோவாவின் ஆலயத்துக்குக் கொண்டுவருவார்கள். 27 ஆனால் நீங்கள் எனக்குக் கீழ்ப்படியாமல், ஓய்வுநாளை பரிசுத்தமாகக் கைக்கொள்ளத் தவறி, அந்த நாளில் பாரத்தைச் சுமந்துகொண்டு எருசலேமின் வாசல்களின் வழியே வருவீர்களானால், நான் எருசலேமின் வாசல்களில் அணைக்க முடியாத நெருப்பை மூட்டுவேன். அது எருசலேமின் அரண்களைச் சுட்டெரிக்கும்’ என்று யெகோவா அறிவிக்கிறார்.”