2 Chronicles 23 (IRVT)
1 ஏழாம் வருடத்திலே யோய்தா திடன்கொண்டு, நூறுபேருக்கு அதிபதிகளாகிய எரோகாமின் மகன் அசரியாவையும், யோகனானின் மகன் இஸ்மவேலையும், ஓபேதின் மகன் அசரியாவையும், அதாயாவின் மகன் மாசெயாவையும், சிக்ரியின் மகன் எலிஷாபாத்தையும் தன் உடன்படிக்கைக்கு உட்படுத்தினான். 2 அவர்கள் யூதாவிலே சுற்றித்திரிந்து, யூதாவின் பட்டணங்களிலெல்லாம் இருக்கிற லேவியர்களையும், இஸ்ரவேலுடைய முன்னோர்களின் வம்சத்தலைவர்களையும் கூட்டிக்கொண்டு எருசலேமுக்கு வந்தார்கள். 3 அந்த சபையார் எல்லோரும் தேவனுடைய ஆலயத்தில் ராஜாவோடு உடன்படிக்கை செய்தார்கள்; யோய்தா அவர்களை நோக்கி: இதோ, யெகோவா தாவீதின் மகன்களைக்குறித்து சொன்னபடியே ராஜாவின் மகன் ராஜாவாக வேண்டும். 4 நீங்கள் செய்யவேண்டிய காரியம் என்னவென்றால், இந்தவாரத்தில், முறைப்படி வருகிற ஆசாரியர்களும் லேவியருமான உங்களில் மூன்றில் ஒரு பங்கு நுழைவாயில்களையும், 5 மூன்றில் ஒரு பங்கு ராஜாவின் அரண்மனையையும், மூன்றில் ஒரு பங்கு அஸ்திபாரவாசலையும் காக்கவும், மக்களெல்லாம் யெகோவாவுடைய ஆலயப் பிராகாரங்களில் இருக்கவும் வேண்டும். 6 ஆசாரியர்களும் லேவியர்களில் ஊழியம் செய்கிறவர்களும் தவிர, ஒருவரும் யெகோவாவுடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கவேண்டாம்; அவர்களே உட்பிரவேசிப்பார்களாக; அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்; மக்களெல்லோரும் யெகோவாவுடைய கட்டளைகளைக் கைக்கொள்வார்களாக. 7 லேவியர்கள் அவரவர் தங்கள் ஆயுதங்களைத் தங்கள் கையிலே பிடித்துக்கொண்டவர்களாக, ராஜாவைச் சுற்றிலும் வரிசையாக நின்றுகொண்டிருக்கவேண்டும்; ஆலயத்திற்குள் வருகிற எவனும் கொலைசெய்யப்பட வேண்டும்; ராஜா உட்பிரவேசிக்கிறபோதும் வெளியே புறப்படுகிறபோதும் நீங்கள் அவரோடு இருங்கள் என்றான். 8 ஆசாரியனாகிய யோய்தா கட்டளையிட்டபடியெல்லாம் லேவியர்களும் யூதா மக்கள் அனைவரும் செய்து, அவரவர் அந்த வாரத்தின் முறைப்படி வருகிறவர்களும், முறை முடிந்து போகிறவர்களுமான தம்தம் மனிதர்களைக் கூட்டிக்கொண்டு போனார்கள்; குழுக்கள் பிரிந்துபோக ஆசாரியனாகிய யோய்தா அனுமதி கொடுக்கவில்லை. 9 தாவீது ராஜா தேவனுடைய ஆலயத்தில் வைத்திருந்த ஈட்டிகளையும் சிறிய மற்றும் பெரிய கேடகங்களையும் ஆசாரியனாகிய யோய்தா நூறுபேருக்கு அதிபதியினிடத்தில் கொடுத்து, 10 அவரவர் தங்கள் ஆயுதங்களைக் கையிலே பிடித்துக்கொண்டவர்களாக ஆலயத்தின் வலதுபக்கம்துவங்கி, ஆலயத்தின் இடதுபக்கம்வரை, பலிபீடத்திற்கும் ஆலயத்திற்கும் எதிரே ராஜாவைச் சுற்றிலும் நிற்க மக்களையெல்லாம் நிறுத்தினான். 11 பின்பு ராஜகுமாரனை வெளியே கொண்டுவந்து, கிரீடத்தை அவன்மேல் வைத்து, சாட்சியின் ஆகமத்தை அவன் கையிலே கொடுத்து, அவனை ராஜாவாக்கினார்கள்; யோய்தாவும் அவன் மகன்களும் அவனை அபிஷேகம்செய்து, ராஜா வாழ்க என்றார்கள். 12 மக்கள் ஓடிவந்து, ராஜாவைப் புகழுகிற சத்தத்தை அத்தாலியாள் கேட்டபோது, அவள் யெகோவாவுடைய ஆலயத்திலுள்ள மக்களிடம் வந்து, 13 இதோ, நுழைவாயிலில் உள்ள தன்னுடைய தூண் அருகில் ராஜா நிற்கிறதையும், ராஜாவின் அருகில் நிற்கிற பிரபுக்களையும், எக்காளம் ஊதுகிறவர்களையும், தேசத்து மக்களெல்லோரும் சந்தோஷப்பட்டு எக்காளங்கள் ஊதுகிறதையும், கீதவாத்தியங்களைப் பிடித்துக்கொண்டு பாடகர்களும் இசைத்தலைவர்களும் துதிக்கிறதையும் கண்டாள்; அப்பொழுது அத்தாலியாள் தன் உடைகளைக் கிழித்துக்கொண்டு: துரோகம் துரோகம் என்று சத்தமிட்டாள். 14 ஆசாரியனாகிய யோய்தா படைத்தலைவர்களாகிய நூறுபேருக்கு அதிபதிகளானவர்களை வெளியே அழைத்து, அவர்களை நோக்கி: இவளை வரிசைக்கு வெளியே கொண்டுபோங்கள்; இவளைப் பின்பற்றுகிறவனைப் பட்டயத்தால் வெட்டிப்போடுங்கள் என்றான். யெகோவாவின் ஆலயத்திலே அவளைக் கொன்றுபோடவேண்டாம் என்று ஆசாரியன் சொல்லியிருந்தான். 15 அவர்கள் அவளுக்கு இடமுண்டாக்கினபோது, அவள் ராஜாவின் அரண்மனையிலிருக்கிற குதிரைகளின் வாசலுக்குள் பிரவேசிக்கும் இடம்வரை போனாள்; அங்கே அவளைக் கொன்றுபோட்டார்கள். 16 அப்பொழுது யோய்தா தாங்கள் யெகோவாவுடைய மக்களாயிருக்க, தானும் அனைத்து மக்களும் ராஜாவும் உடன்படிக்கை செய்துகொள்ளும்படி செய்தான். 17 அப்பொழுது மக்களெல்லோரும் பாகாலின் கோவிலுக்குப் போய், அதை இடித்து, அதின் பலிபீடங்களையும், அதின் விக்கிரகங்களையும் தகர்த்து, பாகாலின் பூசாரியாகிய மாத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொன்றுபோட்டார்கள். 18 தாவீது கட்டளையிட்டபிரகாரம் சந்தோஷத்தோடும், பாடல்களோடும் யெகோவாவின் சர்வாங்க தகனபலிகளை, மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே செலுத்தத்தக்கதாக, யோய்தா யெகோவாவுடைய ஆலயத்தை விசாரிக்கும் பதவிகளை தாவீது யெகோவாவுடைய ஆலயத்துக்கென்று ஏற்படுத்திவைத்த லேவியரான ஆசாரியர்களின் கைகளில் ஒப்படைத்து, 19 யாதொரு காரியத்தினால் தீட்டுப்பட்டவன் யெகோவாவுடைய ஆலயத்திற்குள் நுழையாமலிருக்க, அதின் வாசல்களுக்குக் காவலாளரை நிறுத்தினான். 20 நூறுபேருக்கு அதிபதிகளையும், பெரியவர்களையும், மக்களை ஆளுகிறவர்களையும், தேசத்தின் அனைத்து மக்களையும் கூட்டிக்கொண்டு, ராஜாவைக் யெகோவாவுடைய ஆலயத்திலிருந்து இறங்கச்செய்து, உயர்ந்த வாசல்வழியாக ராஜ அரண்மனைக்குள் அழைத்து வந்து அரசாளும் சிங்காசனத்தின்மேல் ராஜாவை உட்காரச்செய்தார்கள். 21 தேசத்து மக்களெல்லோரும் மகிழ்ந்தார்கள்; அத்தாலியாளைப் பட்டயத்தால் கொன்றபின்பு நகரம் அமைதலானது.
In Other Versions
2 Chronicles 23 in the ANTPNG2D
2 Chronicles 23 in the BNTABOOT
2 Chronicles 23 in the BOATCB2
2 Chronicles 23 in the BOGWICC
2 Chronicles 23 in the BOHNTLTAL
2 Chronicles 23 in the BOILNTAP
2 Chronicles 23 in the BOKHWOG
2 Chronicles 23 in the KBT1ETNIK
2 Chronicles 23 in the TBIAOTANT