Colossians 1 (BOITCV)
1 இறைவனுடைய சித்தத்தின்படி, கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாகிய பவுலும், நமது சகோதரன் தீமோத்தேயுவும், 2 கொலோசே பட்டணத்திலே கிறிஸ்துவில் பரிசுத்தமுள்ளவர்களாகவும், உண்மையுள்ளவர்களாகவும் இருக்கிற சகோதர சகோதரிகளுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய இறைவனால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. 3 உங்களுக்காக நாங்கள் மன்றாடும்போது, நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய இறைவனுக்கு எப்பொழுதும் நன்றி செலுத்துகிறோம். 4 ஏனெனில், கிறிஸ்து இயேசுவில் நீங்கள் வைத்திருக்கும் விசுவாசத்தைக்குறித்தும், பரிசுத்தவான்கள் எல்லோரிலும் உங்களுக்கிருக்கிற அன்பைக்குறித்தும், நாங்கள் கேள்விப்பட்டோம். 5 பரலோகத்தில் உங்களுக்கென வைக்கப்பட்டிருக்கிற நன்மைகளின் எதிர்பார்ப்பிலிருந்தே, இந்த விசுவாசமும் அன்பும் ஊற்றாகப் பொங்கி வருகின்றன. இந்த எதிர்பார்ப்பைக்குறித்து, உண்மையின் வார்த்தையாகிய நற்செய்தியின் மூலமாய் நீங்கள் முன்னரே கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 6 அந்த நற்செய்தி உங்களிடத்திலும் வந்திருக்கிறது. நீங்கள் நற்செய்தியைக் கேட்டு, இறைவனுடைய கிருபையை உண்மையாக விளங்கிக்கொண்ட அந்த நாளிலிருந்து, உங்களிடையே அது கனிகொடுத்து வளர்ச்சியடைந்தது. அதுபோலவே, இந்த நற்செய்தி உலகம் முழுவதும் கனிகொடுத்து வளர்ச்சியடைகிறது. 7 இந்த நற்செய்தியை எங்களுக்கு அன்பான உடன் ஊழியனும், கிறிஸ்துவின் உண்மையுள்ள ஊழிக்காரனுமாயிருக்கிற எப்பாப்பிராத்துவிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்டீர்கள். 8 பரிசுத்த ஆவியானவரால் நீங்கள் பெற்றிருக்கும் அன்பைக்குறித்தும் அவன் எங்களுக்குத் தெரியப்படுத்தினான். 9 எனவே உங்களைக்குறித்து கேள்விப்பட்ட நாளிலிருந்து, நாங்கள் உங்களுக்காக மன்றாடுவதை நிறுத்தவில்லை. நீங்கள் ஆவியானவர் கொடுக்கும் ஞானத்தையும் விளக்கத்தையும் பெற்று, இறைவனின் திட்டத்தைப் பற்றிய அறிவினாலே நிரப்பப்பட வேண்டுமென்று நாங்கள் இறைவனிடம் கேட்கிறோம். 10 நீங்கள் கர்த்தருக்கு உகந்த வாழ்க்கையை வாழவேண்டும் என்றும், எல்லாவிதத்திலும் அவரைப் பிரியப்படுத்த வேண்டுமென்றும், எல்லா நல்ல வேலைகளிலும் கனிகொடுக்க வேண்டுமென்றும் நாங்கள் இப்படி மன்றாடுகிறோம். இறைவனைப்பற்றிய அறிவில் நீங்கள் வளரவேண்டும் என்றும், 11 இறைவனுடைய மகிமையான ஆற்றலிலிருந்து வரும், எல்லா வல்லமையினாலும் நீங்கள் பெலப்பட வேண்டும் என்றும் மன்றாடுகிறோம். அப்பொழுது நீங்கள் மிகுந்த சகிப்புத்தன்மை உடையவர்களும், பொறுமையுடையவர்களுமாய் இருந்து, 12 பிதாவுக்கு மகிழ்ச்சியுடன் நன்றி செலுத்துவீர்கள். அவரே ஒளியின் அரசில் இறைவனுடைய மக்களுக்குரிய உரிமையில் நீங்களும் பங்கு பெறும்படி உங்களைத் தகுதியுடையவர்களாக்கினார். 13 ஏனெனில், பிதாவானவர் இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுவித்து, அவருடைய அன்பான மகன் கிறிஸ்துவின் அரசுக்குள் நம்மைக் கொண்டுவந்திருக்கிறார். 14 கிறிஸ்துவிலேயே நமக்கு மீட்பு உண்டு, அது பாவங்களுக்கான மன்னிப்பு. 15 கண்ணுக்குத் தெரியாத இறைவனின் சாயலாய் இருப்பவர் கிறிஸ்துவே. எல்லாப் படைப்புகளுக்கும் மேலான முதற்பேறானவர் இவரே. 16 இவர் மூலமே எல்லாம் படைக்கப்பட்டன, காணப்படுகிறவைகளோ, காணப்படாதவைகளோ, வானத்திலும் பூமியிலுமுள்ள எல்லாம் இவர் மூலமே படைக்கப்பட்டன. அரியணைகளோ, வல்லமைகளோ, ஆளுகிறவர்களோ, அதிகாரங்களோ எல்லாமே இவராலேயே, இவருக்கென்றே படைக்கப்பட்டன. 17 இவரே எல்லாவற்றிற்கும் முந்தினவராக இருக்கிறார். எல்லாம் அவரோடிணைந்து நிலைநிற்கிறது. 18 இவரே திருச்சபையாகிய உடலுக்குத் தலையாயிருக்கிறார். இவரே அதன் ஆரம்பமும் இறந்தவர்களிடையே இருந்து முதலாவதாய் உயிருடன் எழுந்தவரும் ஆவார். இதனால் எல்லாவற்றிலும் இவருக்கே முதன்மை இருக்கிறது. 19 இறைவன் தம்முடைய எல்லா முழுநிறைவையும் கிறிஸ்துவில் குடியிருக்கச் செய்ய விரும்பினார். 20 கிறிஸ்து சிலுவையில் சிந்திய இரத்தத்தினாலே, இறைவன் சமாதானத்தை உண்டாக்கவும் அத்துடன் கிறிஸ்துவின் மூலமாகவே பரலோகத்திலும், பூமியிலும் உள்ள எல்லாவற்றையும் தம்மோடு ஒப்புரவாக்கிக்கொள்ள பிரியங்கொண்டார். 21 முன்பு நீங்கள் இறைவனிடமிருந்து அந்நியராகயிருந்தீர்கள். உங்கள் தீமையான நடத்தையின் காரணமாக உங்கள் மனதில் அவருக்குப் பகைவர்களாக இருந்தீர்கள். 22 ஆனால் இப்பொழுது கிறிஸ்துவினுடைய மனித உடல் மரணத்திற்கு உட்பட்டதன் மூலமாக இறைவன் உங்களைத் தம்முடன் ஒப்புரவாக்கினார். இறைவனுடைய பார்வையிலே உங்களைக் கறைப்படாதவர்களாகவும், குற்றமற்றவர்களாகவும், பரிசுத்தமுள்ளவர்களாகவும் தம் முன்னே நிறுத்தும்படிக்கே அவர் இப்படிச் செய்தார். 23 நீங்கள் கேட்ட நற்செய்தியினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு விலகாமல், விசுவாசத்தில் உறுதியுடையவர்களாய் தொடர்ந்து நிலைத்திருங்கள். அந்த நற்செய்தி வானத்தின் கீழுள்ள எல்லாப் படைப்புகளுக்கும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பவுலாகிய நான் இந்த நற்செய்தியை அறிவிக்கும் ஊழியனாகியிருக்கிறேன். 24 இப்பொழுது உங்களுக்காக நான் பட்ட துன்பங்களைக்குறித்து மகிழ்ச்சியடைகிறேன். எனவே கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபைக்கான அவருடைய துன்பங்களில், நானும் பங்கு பெறும்படி, எனது மாம்சத்திலும் வேதனைகளை அனுபவிக்கிறேன். 25 உங்களுக்கு இறைவனுடைய வார்த்தையை முழுமையாக அறிவிக்கும்படிக்கு, இறைவன் எனக்குக் கொடுத்த பொறுப்பினாலே நான் அவருடைய திருச்சபையின் ஊழியக்காரனானேன். 26 அந்த இரகசியம் காலாகாலமாகவும், தலைமுறை தலைமுறையாகவும் மறைக்கப்பட்டே இருந்தது. ஆனால் இப்பொழுதோ, அது பரிசுத்தவான்களுக்கு வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது. 27 இந்த இரகசியத்தை, யூதரல்லாதவர்களின் நடுவிலும் வெளிப்படுத்துகிறார் என்பதை தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தவே இறைவன் தீர்மானித்தார். கிறிஸ்து உங்களுக்குள் குடியிருப்பதென்பதே அந்த இரகசியம். இதுவே கிறிஸ்துவின் மகிமையில் நாமும் பங்குகொள்வோம் என்ற எதிர்பார்ப்பைக் கொடுக்கும் மகிமையான செல்வம். 28 ஒவ்வொருவரையும் கிறிஸ்துவில் முழுமை பெற்றவர்களாக நிறுத்தும்படிக்கு, நாங்கள் எல்லோருக்கும் கிறிஸ்துவை அறிவித்து, எல்லா ஞானத்தோடும் புத்தி சொல்லி போதித்து வருகிறோம். 29 இதற்காகவே, நான் எனக்குள் செயல்படுகிற அவருடைய ஆற்றல் நிறைந்த முழு வல்லமையுடனும் போராடிப் பிரயாசப்படுகிறேன்.