Isaiah 48 (BOITCV)
1 “யாக்கோபின் குடும்பத்தாரே, இதைக் கேளுங்கள்.இஸ்ரயேலின் பெயரால் அழைக்கப்படுகிறவர்களே,யூதாவின் வம்சத்திலிருந்து வந்தவர்களே,யெகோவாவின் பெயரினால் ஆணையிடுகிறவர்களே, கேளுங்கள்;நீங்கள் இஸ்ரயேலின் இறைவனை வழிபடுகிறவர்கள்;ஆயினும், நீங்கள் உண்மையுடனும், நீதியுடனும் அப்படிச் செய்யவில்லை. 2 நீங்கள் உங்களைப் பரிசுத்த நகரத்தின் குடிமக்களென்று சொல்லி,இஸ்ரயேலின் இறைவனைச் சார்ந்திருக்கிறீர்கள்;சேனைகளின் யெகோவா என்பது அவரது பெயர். 3 முற்காலத்துக் காரியங்களை முன்கூட்டியே நான் உங்களுக்கு முன்னறிவித்தேன்;எனது வாய் அவைகளை அறிவித்தது, நானே அவைகளைத் தெரியப்படுத்தினேன்.பின்பு திடீரென நான் செயலாற்ற அவை நிறைவேறிற்று. 4 நீ எவ்வளவு பிடிவாதமுள்ளவனாயிருந்தாய் என்றும்,உன் கழுத்தின் தசைநார் இரும்பு என்றும்,உன் நெற்றி வெண்கலமென்றும் நான் அறிந்திருந்தேன். 5 ஆகையால் அவைகளை வெகுகாலத்திற்கு முன்னமே உனக்கு அறிவித்தேன்;அவை நடைபெறும் முன்பே அவைகளை உனக்குக் கூறினேன்.ஆதலால், ‘எனது விக்கிரகங்களே இவற்றைச் செய்தன;எனது மரச்சிலையும், உலோகச் சிலையுமே இவற்றைத் திட்டமிட்டன’என்று நீ சொல்லமுடியாது. 6 இவற்றை நீ கேட்டிருக்கிறாய்; இவை எல்லாவற்றையும் கவனி.இவற்றை நீ அறிவிக்கமாட்டாயோ? “இதுமுதல் புதிய காரியங்களை நான் உனக்குச் சொல்வேன்,இவைகளோ நீ அறியாத மறைவான காரியங்கள். 7 அவை வெகுகாலத்திற்கு முன்பு அல்ல, இப்பொழுதுதான் உருவாக்கப்படுகின்றன;நீ இதற்குமுன் அவைகளைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கவில்லை.ஆகவே, ‘ஆம், நான் அவைகளை அறிந்திருந்தேன்’என்று உன்னால் சொல்லமுடியாது. 8 நீ கேள்விப்படவுமில்லை, அறியவுமில்லை;முந்திய காலத்திலிருந்தே உன் செவிகள் திறக்கப்பட்டிருக்கவில்லை.நீ எவ்வளவு துரோகி,பிறப்பிலிருந்தே நீ கலகக்காரன்; இதை நான் நன்கு அறிவேன். 9 நான் என் பெயரின் நிமித்தமாகவே எனது கடுங்கோபத்தைத் தாமதமாக்குகிறேன்;எனது புகழ்ச்சியின் நிமித்தமாகவே உன்னில் பொறுமையாயிருக்கிறேன்;நீ அழிந்துபோகாதபடிக்கு எனது கோபத்தை உன்மேல் வரவிடாதிருக்கிறேன். 10 இதோ, நான் உன்னைப் புடமிட்டுச் சுத்திகரித்தேன், ஆயினும் வெள்ளியைப்போலல்ல;உபத்திரவத்தின் சூளையிலே உன்னைச் சோதித்துப்பார்த்தேன். 11 என் நிமித்தமாக, என் நிமித்தமாகவே இதை நான் செய்கிறேன்.என் பெயர் களங்கப்பட நான் எப்படி இடமளிப்பேன்?என் மகிமையை நான் வேறொருவருக்கும் கொடுக்கமாட்டேன். 12 “யாக்கோபே, நான் அழைத்த இஸ்ரயேலே,எனக்குச் செவிகொடு,நானே அவர்;ஆரம்பமும் முடிவும் நானே. 13 என் சொந்தக் கரமே பூமியின் அஸ்திபாரங்களை அமைத்தது;என் வலதுகரம் வானங்களை விரித்தது;நான் அவைகளை அழைப்பிக்கின்றபோது,அவை ஒன்றாய் எழுந்து நிற்கும். 14 “நீங்கள் எல்லோரும் ஒன்றாய் கூடிவந்து, நான் சொல்வதைக் கேளுங்கள்:உங்கள் விக்கிரகங்களில் எது இந்தக் காரியங்களை முன்னறிவித்தது?யெகோவாவுக்குப் பிரியமானவன்அவருடைய நோக்கத்தை, பாபிலோனுக்கு விரோதமாக நிறைவேற்றுவான்;அவனுடைய கை பாபிலோனியர்களுக்கு விரோதமானதாகவே இருக்கும். 15 நான், நானே பேசினேன்;மெய்யாகவே நான் அவனை அழைத்தேன்.நான் அவனைக் கொண்டுவருவேன்,அவன் தன்னுடைய பணியில் வெற்றிபெறுவான். 16 “நீங்கள் என் அருகே வந்து இதைக் கேளுங்கள்:“முதல் அறிவிப்பிலிருந்தே நான் இரகசியமாய்ப் பேசவில்லை;அது நடைபெற்ற காலத்தில் நான் அங்கு இருக்கிறேன்.” இப்பொழுது ஆண்டவராகிய யெகோவா தமதுஆவியானவருடன் என்னை அனுப்பியிருக்கிறார். 17 யெகோவா சொல்வது இதுவே,இஸ்ரயேலரின் பரிசுத்தராகிய உங்கள் மீட்பர் சொல்கிறதாவது:“உங்கள் இறைவனாகிய யெகோவா நானே,மிக நன்மையானவற்றை உங்களுக்குக் போதிக்கிறவர் நானல்லவா?நீங்கள் போகவேண்டிய பாதையில் உங்களை வழிநடத்துகிறவர் நானல்லவா? 18 என்னுடைய கட்டளைகளுக்கு நீங்கள் கவனம் செலுத்தியிருந்தால்,உங்களுடைய சமாதானம் நதியைப்போல் இருந்திருக்கும்;உங்களுடைய நீதி கடலின் அலைகளைப்போல இருந்திருக்கும். 19 உங்கள் சந்ததிகள் மணலைப்போல் இருந்திருப்பார்கள்;உங்களுடைய பிள்ளைகள் அந்த மணலின் எண்ணற்ற துகள்களைப்போல இருந்திருப்பார்கள்;அவர்களுடைய பெயர்கள் என் முன்னிலையில் இருந்து நீங்காமலும்,அழிக்கப்படாமலும் இருந்திருக்கும்.” 20 பாபிலோனைவிட்டு வெளியேறுங்கள்,பாபிலோனியர்களை விட்டுத் தப்பியோடுங்கள்!ஆனந்த சத்தமிட்டு அதை அறிவித்துப்பிரசித்தப்படுத்துங்கள்!யெகோவா தனது பணியாளன் யாக்கோபை மீட்டிருக்கிறார் என்று சொல்லி,அந்தச் செய்தியைப் பூமியின் கடைசி எல்லைவரை அனுப்புங்கள்; 21 அவர் அவர்களை பாலைவனத்தின் வழியாக வழிநடத்தியபோது, அவர்கள் தாகமடையவில்லை;அவர் அவர்களுக்காக கற்பாறையிலிருந்து தண்ணீரைப் பாயச்செய்தார்.அவர் பாறையைப் பிளந்தார்,தண்ணீர் பொங்கி வழிந்தது. 22 “கொடுமையானவர்களுக்கு சமாதானம் இல்லை” என்று யெகோவா சொல்கிறார்.